வக்கீல் சங்க தேர்தலுக்கு இடைக்கால தடை…!
புதுச்சேரி வக்கீல் சங்க தேர்தல் இன்று (15-2-24) நடைபெற இருந்தது. மொத்தம் உள்ள 1,175 உறுப்பினர்களில், 811 உறுப்பினர்களே வாக்களிக்க தகுதியானவர்களாக அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் புதுவை வக்கீல் பிரகாஷ், சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், புதுச்சேரி வக்கீல் சங்கத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பார் கவுன்சிலின் சான்றிதழ் மற்றும் பயிற்சி பெற்ற சான்றிதழ் இல்லாதவர்களை வாக்களிக்க அனுமதிக்க கூடாது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் முறையாக விசாரித்து அவர்கள் கொடுக்கும் இறுதி வாக்காளர் பட்டியலை கொண்டு தான் தேர்தல் நடத்த வேண்டும். அதுவரை தேர்தல் நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனு நேற்று நீதிபதி மகாதேவன் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பார்கவுன்சிலானது, முறையாக வாக்காளர் பட்டியலை தயாரித்து வருகிற 26-ந் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் அந்த உத்தரவில் ஒரு கமிட்டி அமைத்து சங்க தேர்தலை நடத்த வேண்டும் என்றும், அதுவரை தேர்தலை நடத்த இடைக்கால தடை விதிக்கப்படுகிறது எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இன்று நடைபெறுவதாக இருந்த வக்கீல் சங்க தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.