தமிழகம் முழுவதும் ஜெயலலிதா 76-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம்!
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்த நாளை முன்னிட்டு வருகிற 24-ந் தேதி முதல் 28-ந் தேதி வரையிலான 5 நாட்கள் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. கட்சியின் அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளிலும், கட்சியின் அமைப்புகள் செயல்பட்டுக்கொண்டிருக்கும் பிற மாநிலங்களிலும் இந்த பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.மாவட்ட செயலாளர்கள், தங்கள் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்கூட்டங்களை கட்சி நிர்வாகிகள்-தொண்டர்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் இணைந்து சிறப்பு பேச்சாளர்களுடன் தொடர்புகொண்டு, ஜெயலலிதா 76-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி, அதன் விவரங்களை கட்சி தலைமைக்கு அனுப்பிவைக்க வேண்டும். இதில் சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியில் வருகிற 25-ந் தேதி நடக்கும் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்கிறார். சென்னை துறைமுகத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், ராயபுரத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். வேளச்சேரியில் முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன், தாம்பரத்தில் முன்னாள் அமைச்சர் செம்மலை, தியாகராயநகரில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரவாயலில் முன்னாள் அமைச்சர் பென்ஜமின், பூந்தமல்லியில் முன்னாள் அமைச்சர் வளர்மதி உள்ளிட்டோரும் பங்கேற்கிறார்கள் என அ.தி.மு.க. சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.