ஆடிப்பெருக்கு.. ஆடி 18 விரத நாளில் சமைக்கும் போது இந்த தவறுகளை மட்டும் செய்யாதீர்கள்
03.08.2023 கடலூர்,
ஆடி பதினெட்டாம் பெருக்கு விழா காலம் காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆடிப்பெருக்கு தமிழகம் முழுவதும் கொண்டாடப்படும் இந்த நேரத்தில் விரதத்திற்காக சமையல் செய்யும் பெண்கள் சில தவறுகளை செய்யக்கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது. ஆடிப்பெருக்கு நாளில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.
காவிரியின் பெருமை: ஆடி 18ஆம் நாளில் பெருகி வரும் புது வெள்ளத்தை வணங்கினால் பயிர்கள் செழிக்கும், விவசாயத்திற்கு தேவையான நீர்வளம் குறைவின்றி கிடைக்கும் என்பது உண்மை. அதனாலேயே விவசாய பெருமக்களுடன் கூடி பலதரப்பு மக்களும் பொன் நிறத்தில் தவழ்ந்து வரும் காவிரியை வணங்குகின்றனர். காவிரியாற்றின் பெருமையை பலரும் புகழ்ந்து பாடி உள்ளனர். அத்தனை பெரும் பழமையும், சிறப்பும் வாய்ந்த காவிரியன்னையை வரவேற்கும் விதத்தில் கொண்டாடுவதே ஆடி பெருக்கு. ஆடி மாதத்தில் பல சிறப்பு விழாக்களில் ஒன்று ஆடிபெருக்கு. ஆடி 18ஆம் நாள் பெருக்கு என்பது கிழமை, திதி, நட்சத்திர என்றவாறு இல்லாத நாட்களில் எண்ணிக்கை ஆடி மாதம் 18ஆம் நாளில் எல்லா ஊர் மக்களும் காவிரியாற்றங்கரையில் பொங்கி வரும் காவிரியன்னையை வரவேற்று கொண்டாடி வருகின்றனர். தென் மேற்கு பருவமழை தொடங்கி புதுப்புனலாய் பொங்கி வரும் காவிரிதாயை தெய்வமாக வணங்கி வழிபட்டுக்கொண்டிருக்கின்றனர்.
விவசாயம் செழிக்கும்: ஆடி பெருக்கு என்பதே விவசாயம் தழைக்க வேண்டி நடைபெறும் விழாவாகும். அதனால் ஆடி பெருக்கிற்கு முன்பே நவதானியங்களை மண்ணில் பரப்பி விளையவிட்டு பயிர்கள் வளர்ந்ததை ஒரு சட்டியில் கொண்டு வந்து காவிரியாற்றின் படித்துறைகளில் வைத்து பூஜித்து, கும்மியடித்து பாடி, குலவையிட்டு பின் ஆற்றில் கலக்க விடுவர். இதில் செல்லும் முளை பயிர்கள் ஏதேனும் நிலப்பகுதியில் நன்கு செழித்து வளரும். இதன் மூலம் பயிர்கள் வெவ்வேறு நில பகுதிகளிலும் சிறப்பாக வளர்ச்சி பெறும் என்பது உறுதி.
தெய்வமாக வழிபடும் பெண்கள்: நதியை வழிபடுவது பன்னெடுங்காலமாய் இருந்து வரும் வழக்கம். நமது தமிழகத்தில் குறிப்பாக ஆடி பெருக்கு எனும் பதினெட்டாம் நாள் பெருக்கு அன்று நதிகள் கரைபுரண்டு ஓடும். அந்த நாளில் புதுவெள்ளம் ஓடும் காவிரியன்னை தம்மை வணங்கும் பெண்களுக்கு நல்ல கணவனையும், கணவனின் நலத்தை காப்பாள் என்று வணங்குகின்றனர். இதற்காகவே ஆடிபெருக்கு அன்று சுமங்கலிகளும், கன்னி பெண்களும் படித்துறை தோறும் புத்தாடை அணிந்து பொங்கி வரும் அன்னை காவிரியை வணங்கி, அவளை அலங்கரிக்கும் பொருட்களை சமர்பிக்கின்றனர்.
நதிகளுக்கு பூஜை: ஆடிபெருக்கும் பூஜையில் காதோலை, கருகமணி, காப்பரிசி மிக முக்கியமானது. மேலும் நைவேந்தியமாக சித்திர அன்னங்கள் மற்றும் புதுமஞ்சள் கயிறு, குங்குமம், மஞ்சள் போன்றவையும் பூஜை பொருட்களாக உள்ளன. காவிரியாற்றின் படித்துறைகளில் பெண்கள் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து விளக்கேற்றி, மேற்சொன்ன பொருட்கள், நெய்வேந்தியம் போன்றவை வைத்து கற்பூரம் ஏற்றி பூஜை செய்வர். பூஜையில் வைத்த புதிய தாலிக்கயிற்றை சுமங்கலிகள் கழுத்தில் அணிந்து கொள்வர். ஆண்கள் வலதுகரத்தில் கட்டி கொள்வர். கன்னி பெண்கள் காவிரியன்னையை வேண்டி மஞ்சள் கயிறை அணிவது வழக்கம்.
காவிரிக்கு வழிபாடு: கர்நாடகாவில் இருந்து புறப்பட்டு வரும் காவிரித்தாய் தமிழகத்தில் புகும் ஒகேனக்கல் பகுதியில் இருந்து ஆடி பெருக்கு விழா தொடங்குகிறது. சிறப்புமிகு பவானி சங்கமம் என்னும் மூன்று நதிகள் கூடும் இடத்தில் லட்சக்கணக்கான மக்கள் ஆடிபெருக்கு அன்று கூடுவர். பவானி சங்கமத்தில் சங்கமேஸ்வரர் கோயிலில் காலை அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். பின் பெண்கள் மற்றும் குடும்பத்தினர் காவிரியன்னையை பூஜித்து பூக்கள் மற்றும் குங்குமம் போன்றவற்றை ஓடும் வெள்ளத்தில் போட்டு வணங்குவர். சிலர் வாழைமட்டையில் விளக்கேற்றி நதிகளில் விடுவர்.
மங்களகரமான ஆடைகள்: ஆடி பதினெட்டு பெண்களில் நல்வாழ்வை, விவசாய பெருவாழ்வை வளர்க்கும் திருநாளாய் கொண்டாடப்படுகிறது. பெண்கள் இந்த நாளில் மங்களகரமான உடை அணிந்து பூவும், பொட்டும் வைத்து அம்மனை வழிபட வேண்டும். திருமண புடவை அணிய வேண்டும், மஞ்சள் பூசி, வளையல் போட்டு பூஜை செய்தால் அம்மனின் முழுமையான பலன் உண்டாகும். மறந்தும் கூட கறுப்பு நிற ஆடைகளை அணிந்து விடாதீர்கள்.
சுவையான உணவுகள்: தெய்வங்கள் வீடுகளில் வாசம் செய்யும் போது வீட்டின் நல்ல வாசம் வீச வேண்டும். இந்த நல்ல நாளில் சுவையான இனிப்பு உணவுகளையே சமைத்து சாப்பிட வேண்டும். கசப்பான சுவை கொண்ட உணவு சமைப்பதைத் தவிர்க்க வேண்டும். வெண்ணெய் மகாலட்சுமியின் அம்சம் என்பதால் இந்த நாளில் வெண்ணை, நெய் உருகுவதை தவிர்க்க வேண்டும். பொதுவாகவே, செவ்வாய், வெள்ளி நாட்களில் வெண்ணை, நெய் போன்றவற்றை உருக்காமல் இருப்பது நல்லது. அதே போல ஆடிப்பெருக்கு நாளில் வெண்ணெய் உருக்குவதை தவிர்ப்பது நல்லது.
அன்னதானம் செய்யுங்கள்: ஆடிப்பெருக்கு நாளில் புது தாலி மாற்றிக்கொண்ட பெண்கள் பெரியோர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி கொள்ள வேண்டும். தேவையற்ற சண்டை சச்சரவுகளைத் தவிர்க்க வேண்டும். ஆடிப்பெருக்கு நாளில் பணம், நகை இரவலாகவோ அல்லது கடனாகவோ கொடுப்பதை தவிர்க்க வேண்டும். அதே நேரத்தில் அன்னதானம் கொடுக்க வேண்டும். பெண்கள் கட்டாயம் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் கொடுத்து இறைவனை திருப்திபடுத்துங்கள். ஆடிப்பெருக்கு நாளில் அனைத்து நன்மைகளும் நடைபெறும். செல்வ வளமும் பெருகும். வீட்டிற்குத் தேவையான கல் உப்பு, மஞ்சள் வாங்கி வைத்து பூஜை செய்து விளக்கேற்றி வழிபட்டாலும் செல்வம் பெருகும்.
எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்
https://chat.whatsapp.com/DoqmK1z6vKpKGOgRGyDo4T