காலி மனைகளுக்கு வரி விதிப்பு!
தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் விதிகள், 2023-இல், பிரிவு- 266(1) விவசாயத்திற்கு என்று பிரத்யோகமாக பயன்படுத்தப்படும் காலிமனைகள் தவிர அனைத்து காலிமனைகளுக்கும் சொத்து வரி நிர்ணயம் செய்யப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், 266(2)இல் கட்டடம் கட்டப்பட்டுள்ள அளவீட்டினைப்போல் 2 மடங்கு காலி நிலத்தினை விடுத்து அதற்கு கூடுதலாக உள்ள காலி நிலத்திற்கு உரிய விதிமுறைகளைப் பயன்படுத்தி, காலிமனைவரி வதிப்பு செய்யப்படவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு நகர்ப்பர உள்ளாட்சி அமைப்புகள் (திருத்தம்) சட்டம் 2022, பிரிவு 97 மற்றும் தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்பு விதிகள் பிரிவு-259(1)(e)-இல் விடுபட்ட வரியினங்களுக்கு குறிப்பிட்ட நடப்பு அரையாண்டு தவிர்த்து முன்னுள்ள 12 அரையாண்டுகள் அல்லது 6 வருடங்களுக்கு சொத்து வரி விதிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் பெரும்பாலான மாநகராட்சிகள் ( சென்னை மாநகராட்சி தவிர) மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள காலிமனைகளுக்கு காலிமனை வரி விதிக்காமல் நிதி இழப்பு ஏற்படுவதாகத் தெரிய வருகிறது. எனவே காலிமனை வரி விதிப்பு செய்ய பின்வரும் வழிமுறைகளை கடைபிடிக்குமாறு அனைத்து மாநகராட்சி ஆணையருக்கும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
1) மனைப்பிரிவு அங்கீகாரம் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு, வணிகவளாக கட்டிடங்கள் முதலிய கட்டுமானங்களுக்கு அனுமதி கோரி உள்ளூர் திட்டக் குழுமத்திற்கு விண்ணப்பங்கள் பெறப்படும்போது, நிலத்தின் குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் அளவீடு செய்து காலிமனை வரி விதிக்கப்படாமல், நில உரிமைதாரருக்குச் சொந்தமாக உள்ள மொத்த நிலப்பரப்பிற்கும் தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் (திருத்தம்) சட்டம் 2022, பிரிவு 97 மற்றும் 259(1)(e)இல் தெரிவித்துள்ளபடி நடப்பு அரையாண்டுக்கு முன்னர் 12 அரையாண்டுகளுக்கு காலி நிலவரி விதிக்கப்பட வேண்டும்.
2) விதிகளின் படி காலியிட வரி விதிப்பு செய்த, நிலுவையின்றி காலியிடவரி செலுத்திய பின்னரே உள்ளூர் திட்டக்குழுமத்தில் பொருள் வைக்க பரிந்துரைக்கப்பட வேண்டும்.
3) மேலும் கட்டட உரிமம் நீட்டிப்பு கோரி பெறப்படும் விண்ணப்பங்களும் நடப்பு அரையாண்டு வரையிலான காலியிட வரி முழுமையாக செலுத்தப்பட்ட பின்பு மட்டுமே கட்டட உரிமம் நீட்டிப்பு பரிந்துரை செய்யப்பட வேண்டும்.
4) மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள காலிமனைகளை பத்திர பதிவு செய்ய வரும் நபர்களை காலிமனை வரி விதிப்பு செய்த ரசீது பெற்ற பின்பு பத்திரம் பதிவு செய்ய பதிவுத்துறை அலுவலகங்களுக்கு அறிவிப்பு வழங்க தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.