சென்னையில் தேசிய முதியோர் நல மையத்தை பிரதமர் திறந்து வைத்தார்; 17 ஆண்டுகளுக்கு முன் நான் விதைத்த விதை இன்று முதியோரை காக்கும் மரமானதில் மகிழ்ச்சி!
சென்னை கிண்டி கிங் நிறுவன வளாகத்தில் ரூ.157 கோடியில் அமைக்கப்பட்ட தேசிய முதியோர் நல மையத்தை (National Centre for Aging), குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் இன்று நடைபெற்ற விழாவில், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திறந்து வைத்திருக்கிறார். மூத்த குடிமக்களின் நலனுக்காக, இந்தியாவில் தில்லி எய்ம்ஸ்சுக்கு அடுத்தப்படியாக திறக்கப்படும் இரண்டாவது சிறப்பு மருத்துவமனை இதுவாகும். தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை வளாகம், சென்னை கிங்ஸ் நிறுவன வளாகம் ஆகிய இரண்டிலும் அமைக்கப்பட்டுள்ள தேசிய முதியோர் நல மையத்திற்கான விதையை 17 ஆண்டுகளுக்கு முன் விதைத்ததும், அவற்றுக்கான நிதியை ஒதுக்கீடு செய்ததும் அப்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றிய நான் என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.இந்தியாவில் தேசிய முதியோர் நல மையத்தை அமைக்க வேண்டும் என்பது எனது கனவு. உலகிலேயே முதன்முறையாக மூத்த குடிமக்களின் நலனுக்காக மருத்துவ கவனிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை தொடங்கியது அமெரிக்கா. அதற்குப் பிறகு ஆஸ்திரேலியா உள்ளிட்ட சில நாடுகளில் இத்தகைய மருத்துவ மையங்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் மூத்த குடிமக்கள் இருப்பதால் இங்கும் அத்தகைய மையத்தை ஏற்படுத்த @வண்டும் என்று கடந்த 1999-ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சுகாதார அமைப்பின் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. அதன்பின் 2004-ஆம் ஆண்டில் மத்திய சுகாதார அமைச்சராக பொறுப்பேற்ற நான் இந்தியாவின் முதல் தேசிய முதியோர் நல மையம் சென்னையிலும், இரண்டாவது மையம் தில்லி எய்ம்ஸ் வளாகத்திலும் அமைக்கப்படும் என்று அறிவித்தேன்.சென்னையில் தேசிய முதியோர் நல மையம் அமைப்பதற்கு 2007-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மொத்தம் 112 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தத் திட்டத்திற்கு முதற்கட்டமாக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், அதன்பின் ஓராண்டுக்கு மேலாகியும் அப்போதைய தமிழக அரசு தேசிய முதியோர் நல மையம் அமைக்க நிலம் ஒதுக்கவில்லை. எனது ஓராண்டு கால வலியுறுத்தலுக்குப் பிறகு 2008-ஆம் ஆண்டு சென்னை கே.கே.நகரில் அதற்கான நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், அதன்பின் 8 ஆண்டுகள் ஆகியும் இத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை; அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியும் செலவழிக்கப்படவில்லை.மத்தியில் நரேந்திரமோடி அவர்கள் தலைமையிலான ஆட்சி அமைக்கப்பட்ட பிறகு 2016-ஆம் ஆண்டில் தில்லி மற்றும் சென்னையில் தேசிய முதியோர் நல மையம் அமைக்கும் திட்டத்திற்கு புத்துயிரூட்டப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சென்னையில் 2019-ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டு, கொரோனா பெருந்தொற்று காலத்தில் சிறப்பு மருத்துவமனையாக செயல்பட்டு வந்த மருத்துவமனை, இன்று முதல் முதியோர் நல மையமாக செயல்படவிருக்கிறது என்ன பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.