இல்லம் தேடி கல்வி; கல்வித்துறை எச்சரிக்கை!
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காலக்கட்டத்தில் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை சீர் செய்ய இல்லம் தேடி கல்வி’ எனும் திட்டத்தை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமல்படுத்தியது. தன்னார்வலர்களை கொண்டு மாலை நேரங்களில் மாணவர்களுக்கு கற்றல் சார்ந்த செயல்பாடுகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களை, சில பள்ளிகளில் வகுப்பறைகளை கவனிக்க சொல்வதாக பள்ளிக்கல்வித்துறைக்கு புகார் சென்றது. இதையடுத்து, இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களை பள்ளி வகுப்பறையை கவனிக்க சொல்வதோ, பள்ளியில் உள்ள மற்ற வேலைகளை செய்ய சொல்வதோ கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை, பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. மேலும், அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளும்போது தன்னார்வலர்கள் வகுப்பறையில் இருப்பது கண்டறியப்பட்டால், பள்ளி தலைமையாசிரியர் மற்றும் உதவி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது. பள்ளி மேலாண்மை குழு மூலம் நியமனம் செய்யப்பட்ட தற்காலிக ஆசிரியர்கள், இல்லம் தேடி கல்வியில் உள்ள தற்காலிக ஆசிரியர்கள் மட்டும் பள்ளிகளில் இருக்க அனுமதி வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.