இதற்கு டி.என்.பி.எஸ்.சி. தான் பதில் அளிக்க வேண்டும்; ஐகோர்ட்டு அதிரடி!
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 245 சிவில் நீதிபதிகள் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் அறிவிப்பாணை வெளியிட்டது. அதில், முதல் நிலை தேர்வு, பிரதான தேர்வு, நேர்முக தேர்வு என 3 கட்டங்களாக தேர்வு நடத்தப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. கடந்த நவம்பர் மாதம் நடந்த பிரதான தேர்வின் முடிவுகள் கடந்த ஜனவரி மாதம் 5-ந் தேதி வெளியானது. இதில் தேர்ச்சி அடைந்தவர்கள் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டு உள்ளனர். இந்தநிலையில், பிரதான தேர்வின் விடைத்தாள்கள் திருத்தும் பணி முறையாக மேற்கொள்ளப்படவில்லை. அதனால் நேர்முக தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தேர்வில் பங்கேற்றவர்கள் சிலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். அதில் சீருடை பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் போட்டி தேர்வு விடைத்தாள்களை விண்ணப்பதாரர்களுக்கு வழங்குகிறது. ஆனால், நீதிபதி பணிக்கான தேர்வு விடைத்தாள்களை டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் வழங்க மறுக்கிறது. எனவே, இந்த விடைத்தாள்களை வழங்க கோரி அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்கும்படி டி.என்.பி.எஸ்.சிக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் வழக்கிற்கு பதில் அளிக்கும்படி டி.என்.பி.எஸ்.சி. செயலாளர், சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் ஆகியோருக்கு உத்தரவிட்டனர்.