அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் எச்சரிக்கை!
தேர்தல் பிரசாரத்தின்போது, அரசியல் கட்சிகளோ, வேட்பாளர்களோ எவ்வகையிலும் குழந்தைகளை ஈடுபடுத்தக்கூடாது. சுவரொட்டி வினியோகித்தல், துண்டு பிரசுரம் வினியோகித்தல் உள்பட எந்த பணியிலும் பயன்படுத்தக்கூடாது. பிரசாரத்தில், குழந்தைகளை கையில் தூக்கி வைத்திருக்கக்கூடாது. வாகனங்களிலோ, பேரணிகளிலோ குழந்தைகளை ஏற்றி செல்லக்கூடாது. அதுபோல், அனைத்து தேர்தல் அதிகாரிகளும் தேர்தல் தொடர்பான எந்த பணியிலும் குழந்தைகளை ஈடுபடுத்தக்கூடாது. குழந்தை தொழிலாளர்கள் தொடர்பான அனைத்து சட்டங்களும் பின்பற்றப்படுவதை உறுதி செய்வது மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் தனிப்பட்ட பொறுப்பு ஆகும். இந்த விதிமுறைகளை தேர்தல் அதிகாரிகள் மீறினால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இருப்பினும், அரசியல் கட்சியால் எந்த தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபடுத்தப்படாத ஒரு அரசியல் தலைவரை பெற்றோர் அல்லது பாதுகாவலர் துணையுடன் ஒரு குழந்தை வெறுமனே சந்திப்பதை விதிமீறலாக கருத முடியாது என தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.