தமிழ்நாடு முழுவதும் மூடப்பட்ட தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை நடப்பாண்டில் மீண்டும் தொடங்க வேண்டும்! டாக்டர் அன்புமணி இராமதாஸ்
தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் பற்றாக்குறை என்று காரணம் காட்டி, மேல்நிலை வகுப்புகளில் செயல்பட்டு வந்த தொழிற்கல்வி பாடப்பிரிவுகளில் பெரும்பாலானவை கடந்த ஆண்டு மூடப்பட்டன. அதிலும் கடந்த ஆண்டு 11-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை முடிந்து 3 மாதங்கள் கழித்து நிறுத்தப்பட்டன. தொழிற்கல்வியில் சேர்ந்த மாணவர்கள் வேறு பிரிவுகளில் சேர்க்கப்பட்டனர். கடந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் இப்போது தேர்ச்சி பெற்று சென்று விட்டதால் அப்பாடப்பிரிவுகள் நிரந்தரமாக மூடப்பட்டு விட்டன. இது பெரும் சமூக அநீதி ஆகும். தமிழ்நாட்டில் 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான தொழிற்கல்வி பாடப்பிரிவில் பொறியியல், வேளாண்மை, கணக்குப் பதிவியல், செவிலியர் உள்ளிட்ட 9 வகையான பிரிவுகள் உள்ளன. இவை அனைத்தும் பயிற்சியை அடிப்படையாகக் கொண்டவை. அதனால், தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை படித்தவர்கள், தாங்கள் பெற்ற பயிற்சியின் காரணமாக எளிதில் வேலைக்கு செல்ல முடியும். எடுத்துக்காட்டாக சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 1978 முதல் 2010 வரை பால்பண்ணையியல் என்ற பெயரிலும், அதன்பிறகு வேளாண்மையியல் என்ற பெயரிலும் நடத்தப்பட்டு வந்த தொழிற்கல்வி பாடப்பிரிவால் அப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கால்நடை மருத்துவர்களும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேளாண் பட்டதாரிகளும் உருவாகியுள்ளனர். இதேபோல் ஒவ்வொரு பகுதியிலும் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் பல மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் நிகழ்த்தியிருக்கின்றன. அப்பாடப்பிரிவுகளை நீக்கியிருக்கக் கூடாது. தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மாணவர்களை வேலைவாய்ப்புக்கு தகுதியானவர்களாக மாற்றுகின்றன. தொழிற்கல்வி பாடப்பிரிவினருக்கு பொறியியல், வேளாண் அறிவியல், செவிலியர் உள்ளிட்ட பட்டப்படிப்புகளில் சிறப்பு இட ஒதுக்கீடுகள் வழங்கப்படுகின்றன. தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்பட்டு விட்டதால், கிராமப்புற மாணவர்கள் மிகவும் எளிதாக தொழிற்கல்வி பயிலும் வாய்ப்பு பறிக்கப்பட்டிருக்கிறது. ஒருபுறம் மாணவர்களின் தொழிற்திறனை மேம்படுத்தப்படுத்துவதற்காக நான் முதல்வன் போன்ற திட்டங்கள் செயல்படுத்தும் தமிழக அரசு, இன்னொருபுறம் அதே பணியை சிறப்பாக செய்து வரும் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை மூடுவது முரண்பாடாக உள்ளது. தொழிற்கல்வி பாடங்களுக்கான ஆசிரியர்கள் ஓய்வு பெற்று விட்டதாகவும், புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என்றும் கூறி தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை அரசு மூடுவதை ஏற்க முடியாது. தமிழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்ப தகுதியானவர்கள் உள்ளனர். அவர்கள் வேலை கோரி போராட்டம் நடத்தி வரும் நிலையில், ஆசிரியர்கள் இல்லை என்பது நியாயமான காரணம் இல்லை. எனவே, தொழிற்கல்வி ஆசிரியர்களை அமர்த்தி அவர்களுக்கு வேலை வழங்குவதுடன், மூடப்பட்ட தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை மீண்டும் திறந்து மாணவர்களின் எதிர்காலத்தை சிறப்பாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என டாக்டர் அன்புமணி இராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்