“பூங்கொத்து வேண்டாம் புத்தகம் கொடுங்கள் போதும்”-நிர்வாகிகள், தொண்டர்களுக்கு வேண்டுகோள்!
மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு, கட்சியின் நிறுவன தலைவர் எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்டு, ஜெயலலிதாவால் போற்றி வளர்க்கப்பட்ட அ.தி.மு.க., நம்முடைய இருபெரும் தலைவர்களின் நல்லாசியோடு மக்கள் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு பணியாற்றி வருவதை இந்த நேரத்தில் பெருமையோடு நினைவுகூர கடமைப்பட்டுள்ளேன். நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலிலும், அதனையடுத்து நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலிலும் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெற்று வரலாற்று சாதனையை படைத்திடவேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு பணியாற்றி வரும் தலைமைக்கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், கட்சியின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கட்சியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் அனைவரும் என்னை நேரில் சந்திக்க வரும்போதும், கட்சி நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்கும்போதும் என்மீது கொண்ட பேரன்பின் காரணமாக பூங்கொத்து வழங்குவதை, இனிவரும் காலங்களில் கண்டிப்பாக தவிர்க்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இருப்பினும், கட்சியின் பொதுச்செயலாளராகிய என் மீது நீங்கள் அனைவரும் கொண்டிருக்கும் பாசத்தின் காரணமாக என்னை சந்திக்கும்போது, தங்களால் முடிந்தால் கருத்தாழமிக்க புத்தகங்களை மட்டும் வழங்கினால், நான் பெருமகிழ்ச்சி அடைவேன். கட்சி நிர்வாகிகளும், தொன்டர்களும் எனது இந்த அன்பு வேண்டுகோளை அவசியம் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.