மாவட்ட அறிவியல் கண்காட்சி; மாநில அளவிலான போட்டி கடலூரில் 6-ந்தேதி நடக்கிறது!
கரூர் மாவட்டம் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் கரூர் காந்திகிராமம் புனித தெரசா மகளிர் மேல்நிலைப்பள்ளியில், கரூர் மாவட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் 8 முதல் 10-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கான, மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் தங்கவேல் கலந்து கொண்டு மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டு மாணவர்களை பாராட்டினார். கரூர் மாவட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 8 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இயற்பியல், வேதியியல், கணிதம், பூமி மற்றும் விண்வெளி அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல், பொறியியல், உயிரியல், உயிரி வேதியியல், கணினி அறிவியல் சார்ந்த படைப்பாற்றல் திறன், தொழில்நுட்ப அறிவு ஆகியவற்றைக் கண்டறியும் வகையிலும் வளப்படுத்தும் வகையிலும் இக்கண்காட்சி நடைபெற்றது.
இக்கண்காட்சியில் பங்கு பெற்றுள்ள மாணவர்களின் படைப்புகளையும், ஆசிரியர்கள் படைப்புகளையும், கல்லூரிப் பேராசிரியர் நடுவர் குழு பார்வையிட்டுத் தேர்வு செய்தனர். இதில் மொத்தம் 109 படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. சுமார் 80 பள்ளிகளிலிருந்து 162 மாணவ-மாணவிகள் இதில் கலந்து கொண்டனர். இக்கண்காட்சியைச் சுமார் 2,300 மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர். மாநில அளவிலான கண்காட்சிக்குத் தேர்வு செய்யப்பட்ட மாணவ-மாணவிகளுக்குப் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் கண்காட்சியில் பங்குபெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மாவட்ட அளவில் நடைபெற்ற கண்காட்சியில் முதல் இரண்டு இடங்களில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் படைப்புகள், கடலூர் மாவட்டத்தில் வருகிற 6-ந் தேதி (சனிக்கிழமை) அன்று நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் காட்சிப்படுத்தப்பட உள்ளன. மாநில அளவில் வெற்றி பெறவுள்ள போட்டியாளர்கள் ஆந்திர மாநிலத்தில் நடைபெறும் தென்னிந்திய அறிவியல் கண்காட்சியில் கலந்து கொள்ளும் தகுதியைப் பெறுவார்கள் என கலெக்டர் தெரிவித்தார்.