அவதூறு வழக்கில் கோர்ட்டில் இ.பி.எஸ்., ஆஜர்: விசாரணை ஒத்திவைப்பு
சென்னை:தயாநிதி தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்காக, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று (மே 14) அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., ஆஜர் ஆனார். இதையடுத்து, வழக்கு மீதான விசாரணை ஜூன் 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
லோக்சபா தேர்தலில், தி.மு.க., சார்பில், மீண்டும் மத்திய சென்னை வேட்பாளராக தயாநிதி போட்டியிட்டார். அவர் தற்போதும், அந்த தொகுதி எம்.பி.,யாக உள்ளார். சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., மீது, அவர் அவதுாறு வழக்கு தொடர்ந்தார்.
‛‛ பிரசாரத்தில் என் தொகுதி மேம்பாட்டு நிதியில், 75 சதவீத தொகையை நான் செலவு செய்யவில்லை என்றும் நலத்திட்டப் பணிகளை செய்யவில்லை என்றும் கூறியுள்ளார். இது அப்பட்டமான பொய். வேண்டுமென்றே, என் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன், அவதுாறு பரப்பும் வகையில் இ.பி.எஸ்., பேசியுள்ளார்” என தயாநிதி குற்றம் சாட்டியிருந்தார். இந்த வழக்கின் விசாரணைக்கு, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று (மே 14) அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., ஆஜர் ஆனார். இதையடுத்து வழக்கு மீதான விசாரணை ஜூன் 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.