“பஸ், லாரி, கார்கள் செல்ல தடை” சேலம் ,ஏற்காடு மலைப்பாதையில் சாலை சீரமைக்கும் பணி தொடங்கியது,
ஏற்காடு மலைப்பாதையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் திங்கள் காலை (24.04.2023 )முதல் மலைப்பாதையில் பஸ், லாரி, கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு பல ஊர்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
கடந்த ஆண்டு சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் வழியில் உள்ள 2 வது வளைவு மற்றும் 3 வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. உடனே இந்த பகுதியில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு வாகனங்கள் சென்று வர அனுமதி அளிக்கப்பட்டது.
மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் மீண்டும் சரிவு ஏதும் ஏற்பட்டு விடாமல் இருக்க மீண்டும் மணல் மூட்டைகள் வைத்து சிமெண்ட் கலவை பூச மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்தது.
இதனையடுத்து இந்த பணிகள் இன்று (24ம் தேதி) காலை தொடங்கியது.
இதனால் இன்று காலை முதல் வரும் 28ம் தேதி (வெள்ளிக்கிழமை) வரை சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் பஸ், லாரி, கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இரண்டு சக்கர வாகனங்கள் மட்டுமே மலைப் பாதையில் சென்று வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக செல்லும் மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால், மாற்று பாதையான சேலத்தில் இருந்து அயோத்தியாப்பட்டணம் சென்று அங்குள்ள குப்பனூர் வழியே ஏற்காட்டுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை முதல் குப்பனூர் வழியே அரசு, தனியார் பஸ்கள், கார்கள் சென்று வருகிறது.குப்பனூர் பகுதியில் சுங்கச்சாவடி உள்ளது.
வருகிற வெள்ளிக்கிாமை வரை சுங்க சாவடியில் கட்டணம் வசூலிக்க கூடாது என்று மாவட்ட நிர்வாகம் கேட்டு கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இறுதியில் ஏற்காட்டில் கோடை விழாமற்றும் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். அடுத்த மாதம் கோடை விழா நடப்பதை யொட்டி மலை பாதை முழுவதும் சாலையை சீரமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.