அப்பாவி மக்களின் உயிரிழப்பைத் தடுப்பதில் அக்கறை இல்லையா?: அரசுக்கு அன்புமணி கேள்வி
சென்னை: ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து, கடந்த 3 நாட்களில் இருவர் பலியான நிலையில் அப்பாவி மக்களின் உயிரிழப்பைத் தடுப்பதில் தமிழக அரசுக்கு அக்கறை இல்லையா? என பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததிலிருந்தே அத்தீர்ப்புக்கு உச்சநீதிமன்றத்தில் தடை பெற வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி வருகிறேன். ஆனால், அதன் பின் 6 மாதங்களுக்கு மேலாகியும் உச்சநீதிமன்றத்தில் தடை பெறுவதற்கு எந்த நடவடிக்கையையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை. உச்சநீதிமன்றத்திற்கான கோடை விடுமுறை துவங்கி விட்ட நிலையில் அடுத்த இரு மாதங்களுக்கு ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை பெறுவதற்கு வாய்ப்பே இல்லை. இதை வைத்துப் பார்க்கும் போது தமிழக மக்களைக் காக்க வேண்டிய தமிழக அரசு, ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் நலன்களை பாதுகாக்கத் துடிக்கிறதோ என்ற ஐயம் எழுகிறது. ஆன்லைன் சூதாட்ட அரக்கனின் பிடியிலிருந்து தமிழக மக்களைக் காக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது. எனவே, உச்சநீதிமன்றத்தின் விடுமுறைக் கால அமர்வை அணுகியாவது வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வரவும், ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவான சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை பெறவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.