பழைய வரி நிலுவைகள் தொடர்பான சமாதான திட்டம்; காலக்கெடு நீட்டிப்பு!!
2023-ம் ஆண்டு, தமிழ்நாடு வரிகள் (நிலுவைகளைத் தீர்வு செய்தல்) சட்டத்தின் கீழ் பழைய வரி நிலுவைகள் தொடர்பான சமாதான திட்டம் 16.10.2023 முதல் 15.2.2024 வரை நடைமுறைப்படுத்துவதாக அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 9,594 விண்ணப்பங்கள் வணிகர்களிடம் இருந்து பெறப்பட்டு, ரூ.170 கோடி வரை வசூல் செய்யப்பட்டுள்ளது. வணிகர்களின் கோரிக்கையை ஏற்று இச்சமாதான திட்டமானது மேலும் ஒன்றரை மாதங்கள் அதாவது அடுத்த மாதம் (மார்ச்) 31-ந்தேதி வரை நீட்டித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேற்கண்ட தகவல் தமிழக அரசின் வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.