மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற இந்த 32 மாதங்களில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தது குறித்து முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்; எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்கான அரசு முறைப் பயணமாக கடந்த மாதம் 27-ந்தேதி அன்று ஸ்பெயினுக்கு சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டதாகவும், ஸ்பெயின் நாட்டின் முன்னணித் தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகளை தனித்தனியே நேரில் சந்தித்துப் பேசியதாகவும், இதையடுத்து பல தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன்வந்துள்ளதாகவும், பல நிறுவனங்களின் பெயரை குறிப்பிட்டு 7-ந்தேதி (நேற்று முன்தினம்) பேட்டி அளித்துள்ளார்.அ.தி.மு.க. ஆட்சிக் காலங்களில் அமைதியான சட்டம்-ஒழுங்கு, நல்ல உள்கட்டமைப்பு வசதிகள், தடையில்லா மின்சாரம், திறன் வாய்ந்த தொழிலாளர்கள் போன்ற சிறப்பு அம்சங்களை ஏற்படுத்தி, அதனை உலகிற்கு எடுத்துரைக்கும் விதமாகவும், அன்னிய முதலீடுகளை ஈர்க்கும் விதமாகவும் 2015 மற்றும் 2019 ஆண்டுகளில், 2 உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியதன் மூலம் அன்னிய முதலீடு ஈர்க்கப்பட்டது. அதில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் முறையே சுமார் 60 சதவீதம் மற்றும் சுமார் 90 சதவீதம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், எனது தலைமையிலான ஆட்சியில், தொழில் நிறுவனங்கள், தொழில் முதலீட்டாளர்கள் எளிதில் என்னை அணுகக்கூடிய வகையில் இருந்ததால், கொரோனா பெருந்தொற்று காலத்தில்கூட பல தொழில் முதலீடுகளை ஈர்க்க முடிந்தது. ஒற்றைச் சாளர முறை அறிமுகப்படுத்தப்பட்டு, எனது தலைமையிலான உயர்மட்டக் குழுவில் தொழில் முதலீட்டாளர்களின் குறைகள் உடனடியாக களையப்பட்டு அ.தி.மு.க. ஆட்சியில் தொழில் வளம் பெருகியது.ஆனால், தி.மு.க. ஆட்சியில் உயர்மட்டக் குழு, அமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்டதால் எந்தவிதமான பயனும் இல்லை. மீண்டும் கோப்புகள் பல அமைச்சர்கள் வழியாக முதல்-அமைச்சர் வரை செல்ல வேண்டியுள்ளது. 2030-க்குள் 1 டிரில்லியன் டாலர் முதலீட்டை கொண்டு வருவேன் என்று கூறியதற்கு இதுநாள்வரை வரைவு அறிக்கை எதுவும் தி.மு.க. அரசால் வெளியிடப்படவில்லை. மு.க.ஸ்டாலின், ஸ்பெயின் பயணத்தினால் தமிழகத்திற்கு 3 நிறுவனங்கள் மூலம் ரூ.3,440 கோடி முதலீட்டிற்கான உடன்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், பல நிறுவனங்கள் எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் முதலீடுகள் செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன என்றும் தெரிவித்துள்ளார். 20 நாட்களுக்கு முன்பு சென்னையில் பல கோடி ரூபாய் செலவழித்து உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியபோதே, ஸ்பெயின் நாட்டின் முதலீட்டாளர்களையும் அழைத்திருக்கலாமே. ஆனால் 20 நாட்கள்கூட முடியாத நிலையில், மீண்டும் முதல்-அமைச்சர் ஸ்பெயினுக்கு சுற்றுப்பயணம் செய்து முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டது முதலீட்டை ஈர்க்கவா? அல்லது முதலீடு செய்யவா? என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது. இதை முதல்-அமைச்சர்தான் விளக்க வேண்டும். மேலும், தற்போது உடன்பாடு ஏற்பட்டுள்ள 3 நிறுவனங்களில், 2 நிறுவனங்களின் அலுவலகங்கள் சென்னை மற்றும் பெருந்துறையில் உள்ளதாக கூறப்படும் நிலையில், ஸ்பெயின் சென்று ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது ஏன் என்பதை முதல்-அமைச்சர்தான் விளக்க வேண்டும். எனவே, தி.மு.க. அரசின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த 32 மாதங்களில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தது குறித்து முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.