தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு விட்டது; அ.தி.மு.க. குற்றச்சாட்டு!
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் கட்சியின் மகளிரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் பின்வருமாறு:-அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் மீண்டும் நல்லாட்சி அமைந்திட அயராது உழைப்போம். ஜெயலலிதா கொண்டு வந்த மக்கள் நலன் காக்கும் மகத்தான திட்டங்கள் ஏராளம். அவருடைய மக்கள் சேவையை இந்த கூட்டம் நினைவு கூர்ந்து மகிழ்ச்சி கொள்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட முத்தான மக்கள் நலத்திட்டங்களை முடக்கி வரும் விடியா தி.மு.க. அரசுக்கு இந்த கூட்டம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.ஜெயலலிதா பிறந்தநாளை… தி.மு.க. அரசு பதவியேற்ற நாள் முதல் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது. திமு.க. அரசுக்கு இந்த கூட்டம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. அ.தி.மு.க.வையும், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களையும் அரணாக காத்து நின்று, அ.தி.மு.க.வை வலிமைப்படுத்தி வரும் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இந்த கூட்டம் நெஞ்சார்ந்த நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்து மகிழ்கிறது. ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாளை (வருகிற 24-ந்தேதி) ஏழை, எளியோர் பயன்பெறும் விழாவாக கொண்டாடுவது எனவும், சர்வதேச மகளிர் தினத்தை சிறப்பாக கொண்டாடுவது எனவும் இந்த கூட்டம் தீர்மானிக்கிறது. நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை மகத்தான வெற்றி பெற செய்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் பொற்பாதங்களில் சமர்ப்பிப்பது என இந்த கூட்டம் சூளுரை ஏற்கிறது. மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.