வந்து விட்டது பழனி பஞ்சாமிர்தம் ரூ.20-க்கு!
பழனியில் உள்ள கோவில் பஞ்சாமிர்த விற்பனை நிலையத்தில், தற்போது பிளாஸ்டிக் டப்பாவில் 450 கிராம் பஞ்சாமிர்தம் ரூ.40-க்கும், தகர டப்பாவில் ரூ.45-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தநிலையில் மினி டப்பாவில் பஞ்சாமிர்தம் விற்பனை செய்ய வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதைக்கருத்தில் கொண்டு 200 கிராம் பஞ்சாமிர்தத்தை மினி டப்பாவில் ரூ.20-க்கு விற்க கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, 200 கிராம் பஞ்சாமிர்தம் ரூ.20-க்கு விற்பனை தொடக்க நிகழ்ச்சி, பழனி முருகன் கோவிலில் நேற்று நடைபெற்றது. இதில், உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி கலந்துகொண்டு, ரூ.20-க்கு பஞ்சாமிர்தம் விற்பனையை தொடங்கி வைத்தார். பின்னர் படிப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள முதலுதவி மையம், பழனி இந்திராநகரில் உள்ள மனநல மையம் ஆகியவற்றையும் அவர் திறந்து வைத்தார். பின்னர் அமைச்சர் நிருபர்களிடம் கூறுகையில், ‘மாஸ்டர் பிளான்’ திட்டத்தால் திருப்பதிக்கு நிகராக பழனி முருகன் கோவிலில் எல்லா வசதியும் செய்யப்படும். தமிழகத்தில் தற்போது அரிசி ஆலைகள் 700-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அங்கு 12 லட்சம் டன் நெல் அரைக்கப்படுகிறது. நெல் வீணாவதை தடுக்க ரூ.400 கோடியில் ‘செமி குடோன்’ அமைக்கும் பணி நடக்கிறது. உணவுப்பொருள் விலை உயர்வை கட்டுப்படுத்த குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.