ஆன்லைன் லோன் ஆப்களுக்கு கூகுள் புது கிடுக்குபிடி..
மோசடிகள் இனியாவது குறையுமா?”
கூகுள் ப்ளே ஸ்டோர், விளையாட்டு ஆப்கள் தொடங்கி கடன் ஆப்கள் வரை கொட்டி கிடக்கும் ஒரு மெகா மார்க்கெட் என்றே சொல்லலாம்.
நமது ஆண்ட்ராய்டு மொபைல்களில் இருக்கும் சமூக வலைதளங்கள், விளையாட்டு ஆப்கள், பொழுதுபோக்கு ஆப்கள்…
என அனைத்து ஆப்களுக்கும் தொடக்கப்புள்ளியே கூகுள் ப்ளே ஸ்டோர் தான்.
சில நேரங்களில் இந்த தொடக்கப்புள்ளியே, பலரது உயிரை பறிக்கும் முற்றுப்புள்ளியாக மாறி வருகிறது.
பொதுவாக நாம் எந்தவொரு ஆப்களை இன்ஸ்டால் செய்யும்போதும் போட்டோ, வீடியோ, இடம், காண்டாக்ட் போன்ற அனுமதிகளுக்கு கண்ணை மூடிக்கொண்டு ‘allow’ கொடுத்துவிடுவோம். இதை நாம் கடன் செயலிகளிலும் பின்பற்றும்போது தான் சிக்கல்கள் எழுகிறது.
ஒருவேளை நம்மால் வட்டி அல்லது கடனை சரியான நேரத்தில் கட்டமுடியாத சூழலில் நமது புகைப்படங்கள் தவறாக சித்தரிக்கப்பட்டு மிரட்டப்படுகிறது.
மேலும் நமது காண்டாக்டில் இருக்கும் மொபைல் எண்களுக்கு போன் செய்து நாம் கடன் கட்டாததை குறித்து தெரிவிக்கின்றனர்.
இப்படி பல சிக்கல்கள் ஆன்லைன் கடன் ஆப்களினால் நடக்கிறது.
இதனால் இந்த ஆப்கள் குறித்த புகார்கள் அரசிடமும், ரிசர்வ் வங்கியிடமும் குவிந்துக்கொண்டே வந்தது.
இதற்கெல்லாம் செக் வைக்கும் விதமாக கூகுள் ப்ளே ஸ்டோர் தனது பாலிசிகளில் சில மாற்றங்களை செய்துள்ளது.
இந்தியாவில் கடன் வழங்கும் ஆப்கள் தங்களது லைசன்ஸ் அல்லது பதிவு ஆவணங்களை கூகுள் நிறுவனத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
கடனை நேரடியாக வழங்காமல் அதற்கு பாலமாக மட்டுமே செயல்படும் ஆப்கள், அதை பற்றி தெளிவாக கூகுளிடம் தெரிவிக்க வேண்டும்.
மேலும் அந்த ஆப்கள் எந்தெந்த வங்கிகள் அல்லது நிறுவனங்களிடம் கடன் வாங்க உதவுகிறது என்பதை தங்களது description-ல் தெரிவிக்க வேண்டும்.
இனிமேல் இந்தியாவில் கடன் வழங்கும் எந்தவொரு கடன் ஆப்பும் போட்டோ, வீடியோ, இடம், காண்டாக்ட் போன்ற அனுமதிகளை கோர முடியாது.
இந்த மாற்றங்கள் அனைத்தும் 2023 மே 31 முதல் நடைமுறைக்கும் வரும்.