பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால்? இதுதான் நடக்கும்; தொல்.திருமாவளவன் கடும் தாக்கு!
திருச்சி புத்தூர் நால் ரோடு பகுதியில் திருச்சியில் மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் “பா.ஜ.க.வை தோற்கடிப்போம், இந்தியா கூட்டணியை ஆதரிப்போம்” என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், இந்திய கூட்டணிக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ள இடதுசாரி அமைப்புகளுக்கு உறுதுணையாக முடிவெடுத்துள்ள மக்கள் அதிகாரத்துக்கு பாராட்டு. வரும் 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான இறுதிப் போர். பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்து, மோடி மீண்டும் பிரதமரானால், நாம் சித்தாந்தங்கள் பற்றி இங்கே இதுபோல பேச முடியாது. கூட்டங்களை நடத்த முடியாது, நமது தேசத்தையும் மக்களையும் காப்பாற்ற முடியாது. நமது இந்திய அரசியலமைப்பு சட்டம் இறையாண்மை, ஜனநாயகம், மதச்சார்பின்மை ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. ஆனால் பா.ஜ.க. சட்டத்தை பயன்படுத்தியே தனது கொள்களை ஒவ்வொன்றாக செயல்படுத்தி வருகிறது. உதாரணமாக, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை இழக்கச் செய்தது, சி.ஏ.ஏ. சட்டத்தை கொண்டு வருவது என செயல்படுத்தி வருகிறது. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்த மனு தர்மத்தை சட்டமாக்கி நிலை நிறுத்துவது பா.ஜனதாவின் திட்டமாக உள்ளது. அதற்கு ஒருபோதும் நாம் இடம் தரக்கூடாது என கூறினார். தொடர்ந்து நடந்த கூட்டத்தில் தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கின்ற தொழிலாளர் நல சட்ட திருத்தங்களை ரத்து செய்து வேலை உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை கார்ப்பரேட்டுகளுக்கு வாரி கொடுப்பதை நிறுத்தி அனைத்தையும் அரசு உடமையாக்க வேண்டும். விவசாயிகளையும், விவசாய நிலங்களையும் நிரந்தரமாக பாதுகாக்கவும், 140 கோடி மக்களின் உணவு தற்சார்பை உறுதி செய்யவும். விதை, உரம், பூச்சி மருந்து, தொழிற் கருவிகள், கொள்முதல் ஆகியவற்றில் கார்ப்பரேட் கம்பெனிகளை அனுமதிக்காமல் அரசே அனைத்தையும் வழங்க வேண்டும். விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதை சட்டபூர்வ உரிமையாக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.