ஆசிரியர் என்ற பதமே பட்ஜெட்டில் இல்லையே…! – மா.குமரேசன்
ஆசிரியர் என்ற பதமே பட்ஜெட்டில் இல்லையே…! – மா.குமரேசன்
தமிழக அரசின் 2026-2027 பட்ஜெட்டில் சமூக நலன், இளைஞர் வேலைவாய்ப்பு, பாதுகாப்பு மற்றும் ஆசிரியர் குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லை. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியளிக்கப்பட்ட பழைய ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை. கடந்த கால ஆட்சிகளின் பட்ஜெட்டிலிருந்து இதில் எந்த மாற்றமும் தெரியவில்லை.
பள்ளிகளுக்கான உட்கட்டமைப்பும் கல்வி நிதி குறைப்பும்
தமிழ்நாட்டில் பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த முதற்கட்டமாக 3,234 பள்ளிகளுக்கு ரூ.2,132 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுவரவேற்கத்தக்கது என்றாலும், இந்த நிதி போதுமானதல்ல. கடந்த பட்ஜெட்டில் ரூ.46,767 கோடியாக இருந்தகல்வி நிதி, தற்போது ரூ.42,351 கோடியாகக் குறைக்கப்பட்டு சுமார் ரூ.4,000 கோடி வெட்டப்பட்டுள்ளது. இது அரசின் முழக்கங்களுக்கு நேர் எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், இந்த நிதிஆசிரியர்கள், மாணவர்நலனுக்காக முழுமையாகப் பயன்படுத்தப்படா மல், திட்டங்கள் என்ற பெயரில் தனியார் நிறுவனங்களுக்கு லாபம் ஈட்டவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. புதிய அரசும் ஆசிரியர், மாணவர் நலனுக்காக ஒப்பந்தஅடிப்படையில் நடைமுறைப்படுத்தாமல் அரசு நேரடியாக நிர்வகிக்க வேண்டும்.
தேர்தல் அறிக்கையும் பழைய ஓய்வூதியத் திட்டமும்
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்டகாலக் கோரிக்கையான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை தவெக தேர்தல்அறிக்கையில் கூறியுள்ளது. தேர்தல் அறிக்கையில் கூறியபடி இத்திட்டத்தை அமல்படுத்துவது குறித்து பல்வேறுமுறை அமைச்சர்களையும் அதிகாரிகளையும் சந்தித்து முறையிட்டும் இந்த பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும்வெளியிடாதது ஏமாற்றம் அளிக்கிறது.
ஆசிரியர் நியமனமும் மாணவர் விடுதிகளும்
தமிழ்நாடு முழுவதும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தலைமைப் ஆசிரியர்,இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் லட்சக்கணக்கில் இருக்கும்நிலையில், மாணவர் சேர்க்கை அரசுப் பள்ளிகளில் அதிகரித்துள்ளதாக அரசுஒப்புக்கொண்டுள்ளபோதும், காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்தும் வேலைக்காக காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்குவது குறித்தும் இந்தபட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை.மேலும், அரசுப் பள்ளி மாணவர் விடுதி களை முழுவதும் அரசின் கட்டுப்பாட்டில் கட்டமைப்பைத் தரப்படுத்துவதற்குப் பதிலாக, தனியாருக்குத் தாரைவார்க்கும் திட்டமாகத் தனியார்-அரசு கூட்டுப் பங்களிப்பு (PPP) திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஏழை, எளிய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு எதிராகவும் அமையும்.
மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் (NHIS)
அரசு ஊழியர், ஆசிரியர்களிடம் மாதம் ரூபாய் 300 பிடித்தம் செய்யப்பட்டு கட்டணமில்லா மருத்துவ சிகிச்சைக்காக நியூ இந்தியாஇன்சூரன்ஸ் கம்பெனியிடம் வழங்கப்பட்டு பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் நடைமுறைப் படுத்தப்பட்டு வந்தது.குறிப்பான சிகிச்சைக்கு ஆகும் செலவுத் தொகையில் 50 விழுக்காடு கூட வழங்குவதில்லை. இதனைத் தொடர்ந்துஅரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றும் அரசு தட்டிக் கழித்து வந்த நிலையில், தற்போது மீண்டும்திருப்திகரமற்ற அரசாணை வெளியிடப்பட்டு மாதம் பிடித்தம் ரூபாய் 390 என உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில்ஆசிரியர்களின் தாய், தந்தையாரைச் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும், அரசே ஏற்று நடத்த வேண்டும்என்ற கோரிக்கையும் பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
சூப்பர் கிளீன் சூப்பர் கேம்பஸ் திட்டம்
பள்ளிகளில் காவலர், ஏவலர், துப்புரவுப் பணியாளர்கள் நிரப்பப்படாமல் அனைத்து வேலைகளையும்ஆசிரியர்களே செய்து வருகிறோம். காலிப்பணியிடங்களை நிரப்புவதற்குப் பதிலாக அவுட்சோர்சிங் முறையில் ஒப்பந்தம் விட நிதிநிலை அறிக்கையில் ‘சூப்பர் கிளீன் சூப்பர்கேம்பஸ்’ திட்டம் அறிவிக்கப்பட்டு ரூ.139 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 10,000 பள்ளிகளுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ள இத்தொகை ஒரு பள்ளிக்கு ஒரு நாளைக்கு ரூ.350 கூட ஒதுக்க முடியாது.இத்தகு குறைந்த தொகையைக் கொண்டு இத்திட்டத்தைச் செயல்படுத்துவது என்பது கண்துடைப்புஅறிவிப்பாகவும், தனியாரை ஊக்குவிக்கும் திட்டமாகவும் பார்க்கிறோம்.
இந்த நிதிநிலை அறிக்கை கல்வி மற்றும்மாணவர் வளர்ச்சிக்குப் பயனற்றதுடன், பட்ஜெட்டில் ‘ஆசிரியர்’ என்ற சொல்லே நிராகரிக்கப்பட்டுள்ளது பெரும் ஏமாற்றமளிக்கிறது. எனவே, வரவிருக்கும் பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையில்பழைய ஓய்வூதியத் திட்டம், காலிப்பணியிடங்களை நிரப்புதல், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்றுநடத்துதல் போன்ற கோரிக்கைகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட வேண்டும்.
நன்றி தீக்கதிர்