சாதி கொடுமையால் ஊர்களை காலி செய்யும் பட்டியல் சாதியினர்,மாணவனுக்கு நடந்தது என்ன?
“நாங்குநேரி: சாதி கொடுமையால் ஊர்களை காலி செய்யும் பட்டியல் சாதியினர் – மாணவனுக்கு என்ன நடந்தது?
13.08.2023, நாங்குநேரி
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவை சேர்ந்த 17 வயது பட்டியல் சாதி மாணவர் ஜாதி ரீதியிலாக வன்கொடுமைக்கு உள்ளாக்கி அவரையும் அவரது தங்கையையும் வெட்டியதாக பதியப்பட்ட வழக்கில் 6 சிறார்களை போலீசார் சிறார் நீதி வாரியத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து முழு விபரம் தெரிந்து கொள்ள பி.பி.சி., நியூஸ் தமிழ் வெட்டப்பட்ட பட்டியல் சாதி சிறுவர் படித்த பள்ளி அமைந்துள்ள வள்ளியூர் மற்றும் அவரது வீடு அமைந்துள்ள நாங்குநேரி பெருந்தெரு ஆகிய இடங்களுக்கு சென்று கள ஆய்வு மேற்கொண்டது. அதன் விவரங்களை இங்கே பார்ப்போம்.
திருநெல்வேலியில் இருந்து சுமார் 43 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது வள்ளியூர். சிறிய வியாபார நகரமான வள்ளியூரில் உள்ள மிகப் பழமையான அரசு உதவி பெறும் பள்ளியில் தான் வெட்டுப்பட்ட பட்டியல் சாதி மாணவரும், அவரை வெட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஆதிக்க சாதி மாணவர்களும் படித்து வருகின்றனர்.
சராசரியாக படிக்கும் அமைதியான மாணவன்
எட்டாம் வகுப்பு வரை சாத்தான்குளம் அருகே உள்ள முதலூர் கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியில் பயின்று வந்த பட்டியல் சாதி மாணவரான பிரபு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 9ம் வகுப்பில் வள்ளியூர் பள்ளியில் சேர்ந்துள்ளார். அவரது தங்கை 6 ஆம் வகுப்பு முதல் இப்பள்ளியில் தான் படித்து வருகிறார்.
அமைதியான குண நலனுள்ள பிரபு சராசரியாக படிப்பார், என்கிறார் பிரபுவுக்கு பத்தாம் வகுப்பில் பாடம் எடுத்த ஆசிரியர்.
பிரபுவை வெட்டியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள மாணவர்களில் இரண்டு பேர் அவர் பயிலும் அதே பன்னிரண்டாம் வகுப்பிலும் மற்றொரு மாணவர் பதினொன்றாம் வகுப்பிலும் படித்து வருகின்றனர்.
பிரபு குறித்து பி.பி.சி., நியூஸ் தமிழிடம் பேசிய பள்ளி தலைமை ஆசிரியை, ஆகஸ்ட் 3 ம் தேதி முதல் பிரபு பள்ளிக்கு வரவில்லை. இதையடுத்து அவரது வகுப்பாசிரியர் அவரது அம்மாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். ஜாதி சான்றிதழ் எடுக்க சென்றுவிட்டதால் அவர் பள்ளிக்கு வரவில்லை என்று அவரது அம்மா முதலில் கூறியுள்ளார்.
தொடர்ந்து அடுத்த நாட்களும் அவர் பள்ளிக்கு வராததால் மீண்டும் வகுப்பாசிரியர் அவரது அம்மாவிடம் தொலைபேசியில் கேட்டுள்ளார். அதற்கு ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய சென்றுவிட்டதாகவும் வேறு பல காரணங்களையும் கூறி சமாளித்துள்ளார்.
பள்ளிக்கு வரும் வழியில் ஆதிக்க சாதி மாணவர்களால் அனுபவித்த கொடுமைகள் குறித்து பிரபு அவரது அம்மாவிடம் முதலில் எதுவும் கூறாமல் இருந்துள்ளார். ஏன் பள்ளிக்கு செல்லவில்லை என்று அம்மா கேட்டதற்கு, தனக்கு பள்ளிக்கு செல்ல பிடிக்கவில்லை என்று மட்டும் தான் கூறியுள்ளார். இதனால் தான் அவரது அம்மா எங்களிடம் ஒன்றுமில்லா காரணங்களை கூறி சமாளித்து வந்துள்ளார்.
சாதிய கொடுமையால் படிப்பை கைவிட முடிவு செய்த மாணவர்
இதற்கிடையே குடும்ப வறுமையை போக்க சென்னைக்கு சென்று ஏதாவது வேலை செய்து சம்பாதிக்க முடிவு செய்துள்ளதாக அம்மாவிடம் தெரிவித்துள்ளார் பிரபு.
இதையடுத்து பிரபு வெட்டப்படுவதற்கு முந்தைய நாள் 8 ஆம் தேதி சென்னைக்கு செல்ல ரயில் நிலையம் சென்று பயணச் சீட்டும் எடுத்துள்ளார்.
அப்போது நாங்குநேரி ரயில் நிலையத்தில் வைத்து பிரபுவை பார்த்த அவரது சித்தியின் மகன், படிப்பதற்கு பயந்து தான் பிரபு சென்னை செல்ல முயல்வதாக எண்ணி அவரை சமாதானபடுத்தி மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
அப்போது கூட ஆதிக்க சாதி மாணவர்களால் தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து அவர் யாரிடமும் வாய்திறக்கவில்லை.
தொடர்ந்து பிரபுவின் சித்தி சுமதி, அவரிடம் ஏன் பள்ளிக்கு செல்ல பிடிக்கவில்லை என்ற காரணத்தை கூறுமாறு கண்டிப்பாக கேட்ட பிறகு தான் அவர் நடந்தவற்றை கூறியுள்ளார்.
உடனே அவரது அம்மா தொலைபேசி மூலம் எங்களிடம் அவருக்கு நடந்த கொடுமைகள் குறித்து விவரித்தார். இதையடுத்து பிரபுவையும் அவரது அம்மாவையும் அடுத்த நாள் பள்ளிக்கு வர கூறினோம். ஆகஸ்ட் 9ம் தேதி இருவரும் பள்ளிக்கு வந்தனர்.
அவருக்கு என்ன என்ன கொடுமைகள் நடந்ததோ அது குறித்து எழுதி தர கேட்டேன். அவர் எழுதி தந்ததை படித்து பார்த்து திகைத்தே விட்டோம், என்றார் தலைமை ஆசிரியை.
“ஆதிக்க சாதி மாணவர்களின் புத்தக பைகளையும் சுமக்க நிர்பந்தம்”
பிரபு அவரது ஊரிலிருந்து அரசு பேருந்தில் வள்ளியூர் பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து பள்ளிக்கு நடந்து வருவது வழக்கம். அவர் வரும் போது ஊரிலிருந்து ஆதிக்க சாதி மாணவர்களும் உடன் பேருந்தில் வருவார்களாம். அவர்களுக்கும் சேர்த்து இவர் தான் பயணச்சீட்டு எடுக்க வேண்டும் என கட்டாயப்படுத்துவார்களாம்.
வள்ளியூர் பேருந்து நிலையத்தில் இருந்து பள்ளி வரும் வரை ஆதிக்க சாதி மாணவர்களின் புத்தக பைகளை பிரபுவிடம் கொடுத்து சுமக்க சொல்லிவிடுவார்களாம். அவர் தான் அதையும் சுமந்து கொண்டு பள்ளிக்கு நடந்து வந்துள்ளார்.
பள்ளிக்கு வரும் வழியில் அவரிடம் ஏவல் பணிகளை செய்ய சொல்வது, வீட்டுப்பாடங்களை எழுத சொல்வது என அவரை ஆதிக்க சாதி மாணவர்கள் கொடுமைபடுத்தியுள்ளனர்.
பிரபுவின் அம்மாவை ஏளனமாக பேசுவதுடன் அசிங்கமான வார்த்தைகளால் திட்டுவதையும் வாடிக்கையாக செய்து வந்துள்ளனர் அந்த மாணவர்கள். அவருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து அவர் யாரிடமாவது கூறினால் அவரை கொன்றுவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து அவர் இது குறித்து யாரிடமும் கூறாமல் அமைதியாக இருந்துள்ளார்.
பிரபு எழுதி தந்த புகார் மனுவை வாங்கி வைத்துக் கொண்டு அவரை வகுப்புக்கு செல்ல கூறினேன். அன்று அந்த ஆதிக்க சாதி மாணவர்களின் பகுதியில் உள்ள கோயிலில் திருவிழா எனபதால் அவர்கள் பள்ளிக்கு வரவில்லை.
அடுத்த நாள் அவர்கள் பள்ளிக்கு வந்ததும் அவர்களது பெற்றோரை வரவழைத்து விஷயத்தை கூறலாம் என எண்ணியிருந்தேன். ஆனால் அதற்குள் அந்த ஆதிக்க ஜாதி மாணவர்களுக்கு தகவல் சென்றுள்ளது. அன்று மாலையே பிரபுவை அழைத்து மிரட்டியுள்ளனர். தொடர்ந்து அன்று இரவே அவர்கள் பிரபுவை வெட்டியதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது என்றார் தலைமை ஆசிரியை.
பள்ளி வளாகத்திலேயே சாதிய பிரச்சனைகள்
எங்கள் பள்ளியில் பல ஜாதி மாணவர்கள் படித்து வருகின்றனர். நாள்தோறும் பள்ளி காலை வழிபாட்டின் போது போதனைகளை வழங்குகிறோம், வெளியில் இருந்து ஆற்றுப்படுத்துபவர்களை (counsellor) வரவழைத்தும், காவல்துறையினர் மூலமும் மாணவர்களுக்கு ஆற்றுப்படுத்துதல் (Counselling) வழங்குகிறோம். விளையாட்டு மைதானங்களிலும் மாணவர்களை பின்தொடர்ந்து கவனித்து வருகிறோம்.
ஆன போதும், தங்கள் ஜாதி தான் உயர்வானது என்று பள்ளி கழிப்பறைகளில் எழுதி வைப்பது, பெண் ஆசிரியைகள் பாடம் எடுக்கும் போது விசில் அடிப்பது, வகுப்பறையில் உள்ள பென்ச் டெஸ்குகளில் ஜாதி பெயரை எழுதி வைப்பது என மாணவர்களால் தொடர்ந்து பள்ளியில் ஜாதி ரீதியிலான பிரச்சனைதான்.
சில நேரங்களில் காவல்துறையினரை பள்ளிக்கு வரவழைத்து சில பிரச்சனைகளில் மாணவர்களை எச்சரிக்கை செய்ய சொல்லும் சம்பவங்களும் நடந்து வருகிறது, என்றார் மேல் வகுப்புகளுக்கு பாடம் கற்றுகொடுக்கும் அந்த பள்ளியை சேர்ந்த ஒரு ஆசிரியர்.
பிரபுவை வெட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள மாணவர்கள் மீது பள்ளியில் ஏற்கனவே பல புகார்கள் உண்டு. அவர்களுக்கு டி.சி., (மாற்று சான்றிதழ்) வழங்கி பள்ளியை விட்டு வெளியேற்றிவிடலாம் என ஆசிரியர்களிடமிருந்து பல முறை கோரிக்கை எழுந்தது.
கல்வியாண்டு முடிய இன்னும் ஆறு மாத காலம் தான் உள்ளது. எப்படியாவது சமாளித்து விட்டால் படிப்பை முடித்து வெளியே சென்றுவிடுவார்கள் என்று தான் நாங்களும் பொறுமையாக இருந்தோம். ஆனால் அதற்குள் இப்படி நடந்து விட்டது, என்றார் மற்றோரு ஆசிரியர்.
கழுவப்படாத ரத்த கறை
வெட்டப்பட்ட போது வீடு முழுவதும் வழிந்த பட்டியல் சாதி மாணவர் பிரபு மற்றும் அவரது தங்கையின் ரத்தம் இன்னும் கழுவப்படாமல் அவர்கள் வீட்டு முற்றம் மற்றும் வீட்டின் உள் அறைகளில் அப்படியே உறைந்து கிடக்கிறது.
அரசியல் கட்சி தலைவர்களும், சாதிய அமைப்பு நிர்வாகிகளும் ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேயப்பட்ட அந்த இரு அறை கொண்ட பிரபுவின் வீட்டின் உள்ளே சென்று பார்வையிட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்.
நாங்குநேரி பெருந்தெருவின் நுழைவு பகுதியில் தற்காலிக கூடாரம் அமைத்து காவல்துறையினர் ஊருக்குள் நுழைபவர்களையும் வெளியே செல்பவர்களையும் கண்காணித்துக் கொண்டிருக்கின்றனர்.
ஊருக்குள்ளேயே புகுந்து இப்படி வெட்டிட்டானுகளே என்று பெண்கள் ஒருவித மிரட்சியுடன் அங்கங்கே கூடி நின்று பேசிக் கொண்டிருந்தனர்.
பி.பி.சி., நியுஸ் தமிழ் சார்பாக கள நிலவரம் அறிய நாம் நாங்குநேரி பெருந்தெருவுக்கு சென்ற போது அங்கே கண்ட காட்சிகள் தான் இவை.
சுமார் 200 வீடுகள் உள்ள பெருந்தெருவில் வசிக்கும் பட்டியல் சாதியின மக்களில் பெரும்பாலானவர்கள் கூலி வேலைக்கு செல்பவர்களாக தான் உள்ளனர்.
சம்பவதன்று இரவு சுமார் 10.30 -11 மணி இருக்கும். ஊரில் உள்ள பெரும்பாலான வீடுகளில் கதவை அடைத்து விட்டு தூங்க சென்றுவிட்டனர். பிரபுவின் வீட்டிலிருந்து திடீரென கேட்ட அழுகுரலை கேட்டு தான் நாங்கள் வெளியே வந்து பார்த்தோம். பிரபுவையும் அவரது தங்கையையும் வெட்டி விட்டு அவர்கள் தப்பித்து ஓடிக் கொண்டிருந்தனர், என்றார் பிரபுவின் வீட்டின் பக்கத்து வீட்டில் வசிக்கும் துரை பாண்டியன். விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியான துரை பாண்டியனுக்கு வெட்டுகாயமடைந்த பிரபு ஒருவிதத்தில் பேரன் முறை.
எங்கள் ஊரில் சங்கர ரெட்டியார் அரசு மேல் நிலை பள்ளி உள்ளது. ஆனால் அங்கு எங்கள் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லாததால் அவர்களை அந்த பள்ளியில் சேர்ப்பதில்லை, என்கிறார் நாங்குநேரி பெருந்தெரு ஊர்தலைவர் அன்பழகன்.
அங்கு படிக்கும் ஆதிக்க சாதி மாணவர்களால் தொடர்ந்து எங்கள் பிள்ளைகள் வன்கொடுமைகளை சந்தித்து வந்தனர். எங்கள் பிள்ளைகளை அவர்கள் படிக்க விடுவதும் இல்லை. இதனால் எங்கள் ஊரை சேர்ந்த பிள்ளைகளை அருகில் உள்ள களக்காடு மற்றும் வள்ளியூர் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் சேர்த்து வருகிறோம் என்றார் அவர்.
ஊரையே காலி செய்த பட்டியலின மக்கள்
முத்துநாயகன் குளம், மறவகுறிச்சி காலனி, தென்னிமலை காலனி, நாலுகால் மண்டபம் உள்ளிட்ட கிராமங்களில் பட்டியல் சாதி மக்கள் அதிக எண்ணிக்கையில் வசித்து வந்தனர். இவை அனைத்தும் எங்கள் ஊரின் அருகில் இருந்த கிராமங்கள்.
கடந்த 20 முப்பது வருடங்களில் ஆதிக்க சாதியினரின் அடக்கு முறைகளால் இன்று இந்த ஊர்கள் காலியாகிவிட்டது. அங்கு வசித்த பட்டியல் சாதி மக்கள் ஊரையே காலி செய்துவிட்டு வேறு பகுதிகளுக்கு குடிபெயர்ந்துவிட்டனர்.
தற்போது நாங்குநேரி நெடுந்தெருவில் வசிக்கும் பட்டியலின மக்களையும் காலி செய்ய வைக்க வேண்டும் என அவர்கள் எண்ணுகிறார்களோ என்னவோ, என்கிறார் துரை பாண்டியன்.
இங்க படிச்சா தான் எங்க பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லைனு களக்காடு, வள்ளியூர்னு கொண்டு சேர்த்தோம். இப்ப அங்கேயும் பிரச்சனைகள் வர ஆரம்பிச்சாச்சு. பிரபு வெட்டப்பட்ட பிறகு எங்க பிள்ளைகள் பள்ளிக்கூடம் செல்லவே பயப்படுகின்றனர், என்றார் அன்பழகன்.
இனியும் இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க ஊரில் சி.சி.டி.வி., கேமரா கண்காணிப்பு ஏற்படுத்த வேண்டும், காவல் துறை கண்காணிப்பை தீவிரபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை ஊர் மக்கள் வைக்கின்றனர்.
எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்