தொழில், வெற்றி, கடன் நிவர்த்தி தரும் தோரண கணபதி
அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற பிரச்சினைகளில் அதிகமான மன உளைச்சலைத் தருவது கடன்தான் என்றால், எல்லாரும் அதை ஏற்றுக்கொள்கிறார்கள்.
ஒருவருடைய ஜனன ஜாதகத்தைப் பொறுத்து, ஒருவர் கடனாளியாவாரா? ஏமாறுவாரா என்று அறிந்துகொள்ள முடியும்.
இந்த உலகத்தில் கடனாளிகளை ஐந்து வகையாக ஜோதிட உலகம் பார்த்து, எச்சரிக்கைசெய்து அதற்குத் தீர்வையும் கொடுக்கிறது.
1. கடன் கொடுத்த கடனாளி.2. கடன்பெற்று அனுபவிக்கும் யோகக் கடனாளி.3. கடன்பெற்று அனுபவிக்காத அவயோகி.4. கடனைப் பெறாமல் அல்லலுறும் கர்மவினைக் கடனாளி.
5. மற்றவர்க்குக் கடன் கொடுத்தே ஏமாற்றமுறும் ஏகாந்தக் கடனாளி.
இங்கே கடன் பெறுபவரும் கொடுப்பவரும் விதிப்படி சங்கமித்திருப்பதால் வகைப்படுத்தப் பட்டுள்ளன.
இக்காலத்தில் யாரும் கடன் வாங்காமல்- கொடுக்காமல் வாழ்க்கை நடத்தமுடியாது. கடன் தொல்லை அதிகரிக்கும்போது மனக்கவலை பெருகி மனநோய் வந்துவிடுகிறது. அல்லது உடல் உறுப்புகளில் சில செயல்படாமல் போகின்றன. கடன்கள் தீரவும், கொடுத்த பணம் திரும்ப வரவும் ஒருவகை கணபதி வழிபாடு நல்ல பலன்களைத் தருகிறது. “கணபதி பூஜை கைமேல் பலன்’ என்று சொல்வழக்கு இருக்கிறது. அந்த கணபதி தான் இருக்கின்ற பீடங்களுக்கேற்றபடி பலன்களைத் தருவார். கி.பி. 9-ஆம் நூற்றாண்டில், இடர் களையும் பிள்ளையார் வழிபாட்டை ஜப்பானில் கோபாதெய்சி என்பவர் தொடங்கியபோது, பல தடைகள் விலகுவதைக் குறிப்பிட்டார்.
தான் குடிகொண்டிருக்கும் இடங்களுக் கேற்ப சிறப்பு பெயர் பெற்று விளங்கும் கணபதியை, அவருக்குரிய விசேடப் பெயர்களால் வழிபட்டு, அதற்கேற்ற பலன்களைப் பெறுகின்றனர். ஆனால் விநாயகரின் இருப்பிடங்களைப் பற்றி அறிய உதவும் “ஆலயமும் கணபதி அம்சங்களும்’ என்ற விதி நூலில், ஒரு ஆலயத்தின் தோரண வாசலில் அமர்ந்தருளும் கணபதி மிகவும் சக்தியுடையவர் என்றும்; கடன் தீர்க்க அருள் தருவதிலும், கொடுத்த கடனைத் திரும்ப இழுப்பதிலும் தனது அருளைத் தந்து நிற்கிறார் என்றும் கூறுகிறது.
தேவ கடன், பித்ருக் கடன் மானுடக் கடன்களில், மூன்றாவதாக உள்ள மனிதக் கடனையடைக்க அருள்வதில் இந்த ஆனைமுகத்தானின் அருளே தனிதான்!
“தோரண கணபதி மகிமை
சிவாகம விதிப்படி மூலஸ்தான மூர்த்தியிடத்திலிருந்து பார்க்கும்போது இவர் அமர்வது பிரம்மஸ்தானமாக அமைவதாலும்; பத்ம பீடம் என்ற தாமரைப் பீடத்திலமர்ந்து அஷ்ட லட்சுமிகளும் புடைசூழ காட்சி தருவதால், வணங்குபவர்களுக்கு தொழில் உயர்வையும், வியாபாரத்தில் லட்சுமி கடாட்சத்தையும் அருளும் யோக கணேசராகவும் விளங்குகிறார். அம்பிகையின் கோஷ்டங்களை ஒட்டிய வலது மேகலையில், தோரண வாயிலைப் பார்த்தவாறு அமைந்து வலம்புரி கணபதியாகத் திகழ்பவர் இன்றும் அதிக சக்தி வாய்ந்தவராகக் காணப்படுகிறார்.
சிரசில் கிரீடம், ஜடாமகுடம் அணிந்து, கழுத்தில் ருத்ராட்ச மாலையுடன், வலக் கரத்தில் அங்குசமும், இடது மேற்கரத்தில் பாசமும் இடது கீழ்க்கரத்தில் மோதகமும், வலது கரத்தில் தந்தமும் வைத்துக்கொண்டு, வலக்கையில் உள்ள கூரிய தந்தத்தால் வணங்குபவர்களின் கடன்களைத் தீர்த்துக் கணக் கெழுதி தீர்வு தருகிறார். பிள்ளையார்பட்டி, மயிலாடுதுறை, வாரணாசி, சிருங்கேரி, குன்றத்தூர் போன்ற தலங்களில் இந்த அமைப்புடைய கணேசரை கண்டு தரிசிக்க லாம். கர்நாடகாவிலுள்ள ஸ்ரீ சிருங்கேரி சாரதாம்பாள் கோவிலில், பிரதான ரட்சகராகவும் காவல் தெய்வமாகவும் இவரே விளங்குகிறார். அனைத்து மகோத்சவங்களின் தொடக்க விழாக்களிலும் ஸ்ரீ தோரண கணபதிக்கே முதல் வழிபாடு நடத்தப்படுகிறது.
எப்படி வழிபாடு செய்வது?
திருமணக்காலங்களிலும் சுபநிகழ்ச்சி களிலும் “தோரணம்’ என்ற மங்களச் சின்னத்தைஎல்லா இடங்களிலும் கட்டுவதால், அங்கே வருபவர்களுக்கும் அலங்காரத்தைக் காண்பவர்களுக்கும் ஒருவித மகிழ்ச்சியும் உற்சாகமும் ஏற்படுகிறது. அதேபோல வலம்புரி கணேசராக உள்ள தோரணரை ஒருவர் வியாபார ஸ்தலத்திலோ வீட்டிலோ பட ரூபத்திலும் யந்திர ரூபத்திலும் வைத்து வழிபட்டால், அங்கே கடன் தொல்லை மறைந்துவிடும். லட்சுமி கடாட்சம், தொழில் முன்னேற்றம் ஏற்படும் என்கிறது வழிபாட்டு விதி.
ஒருவர் ஜனன ஜாதகத்தில் 6-ஆம் பாவகம்தான் கடன் தொல்லை, வழக்கு வியாஜ்ஜியங்களைப் பற்றிக் கூறும் ஸ்தானமாக உள்ளது. அதன்படி தோரண கணபதி சந்நிதிக்கு ஆறு செவ்வாய்க்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் சென்று, அவரது திருமுன்பு, கொடுத்தவர் நலமாக ஒரு தீபம், பெற்றவர் நலமாக ஒரு தீபம், தோரணர்க்குப் பரிகாரமாக ஒரு தீபம் என மூன்று நெய்தீபங்களை ஏற்றிவைத்து, தோரண கணேசருக்குப் பிடித்தமான மாதுளை, மா, கொய்யா, ஆரஞ்சு, திராட்சைப் பழங்களை பத்ம பீடத்தில் சமர்ப்பித்து, அறுகு சாற்றி அர்ச்சனை செய்து, பிறகு தோரண கணபதிமுன் அமர்ந்து தோரண கணபதி பிரசன்ன ஸ்துதியை மூன்று முறை படித்து ஆத்ம பிரதட்சிணம் செய்து, கடன் நிவாரண மூல மந்திரத்தையும் 12 முறை கூறவேண்டும்.
கடன் தீர்க்கும் தோரணரின் மூல மந்திரம்
“ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லாம்
க்லௌம் கம் தோரண கணபதயே
சர்வ கார்ய கர்த்தாய
ஸகல ஸித்தி கராய ஸர்வ
ஜன வசீகரணாய ருணமோசன வல்லபாய
ஹ்ரீம் கம் கணபதயே ஸ்வாஹா.’
இலகுவான மூல மந்திரம்
“ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லௌம் கம்
தோரண கணபதயே ருண மோசனம்
குருகுரு ஸ்வாஹா.’
வியாபார விருத்தி, தொழிலில் லாபம் வேண்டி கணபதியின் திருவுருவப்படம், யந்திரம் வைத்து, யந்திரத்தின்மேல் ஐங்காயத்தை நல்லெண்ணெய் கலந்து பூசிவிட்டு இந்த மந்திரத்தை 32 முறை ஜெபிக்க வேண்டும்.
“ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம்
ஓம் நமோ பகவதே தோரண கணேசாய
வரவரத சர்வ ஜனம்மே வசமானய
வியாபார விருத்திம் தேகி தாபய ஸ்வாஹா!’
யக்ஞங்களின் நியதிகள் கூறும் விதிப்படி 32 வகை, 108 வகையாகக் கூட்டுப் பொருட்கள், மோதகம், அறுகு, புரசு, கருங்காலி, அரசு சமித்துகள் பசுநெய்யுடன், வளர்பிறை சதுர்த்தியன்று கடன்தீர் கணபதி யக்ஞம் செய்து, யாகரட்சையிட கடன் தீர்ந்து மகிழ்ச்சி உண்டாகும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் கண்டிட ஆறு சங்கடஹர சதுர்த்தியில், மாலைவேளையில் இந்த யக்ஞத்தைச் செய்து ரட்சையிட்டு வரவேண்டும்…