ராணுவத்தினர் மீது வழக்கு தொடர மத்திய அரசு அனுமதி மறுப்பு.
நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 13-ந்தேதி தினக்கூலி தொழிலாளர்கள் சென்ற வாகனம் மீது ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது.
இதில் அப்பாவி தொழிலாளர்கள் 6 பேர் உயிரிழந்தனர்.இதை கண்டித்து கிராமத்தினர் வன்முறையில் இறங்கினர்.
இதில் மீண்டும் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பி இருந்தன.
இந்த சம்பவம் தொடர்பாக 30 ராணுவ வீரர்கள் மீது மோன் மாவட்ட கோர்ட்டில் வழக்கு பதியப்பட்டது. அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
ஆனால் வடகிழக்கு மாநிலங்களில் அமல்படுத்தப் பட்டுள்ள ஆயுதப் படைகள் சிறப்பு அதிகார சட்டப்படி, பணியில் இருக்கும்போது,
ராணுவம் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைக்கும் எதிராக வழக்கு தொடர வேண்டுமென்றால் மத்திய அரசின் அனுமதி பெற வேண்டியது அவசியமாகும்.அதன்படி இந்த வீரர்களுக்கு எதிராக வழக்கு தொடர மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டது.
ஆனால் அந்த ராணுவத்தினர் மீது வழக்கு தொடர மத்திய அரசு அனுமதி மறுத்து விட்டது.
இந்த தகவலை மாவட்ட போலீஸ் ஐ.ஜி. ரூபா தெரிவித்து உள்ளார். இது பாதிக்கப்பட்ட மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.