பூச்சொரிதல் விழா உருவாகக் காரணமான அற்புதம் நிகழ்ச்சி

தங்கை மாரியம்மனுக்கு அண்ணன் ஸ்ரீரங்கம் ரங்கநாதரிடம் இருந்து வரும் பூக்களே, முதலில் சொரியப்படுகிறது. பூச்சொரிதல் விழா உருவாகக் காரணமான அற்புத நிகழ்வைப் பற்றி இங்கு பார்ப்போம்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், திருச்சியைக் கைப்பற்றுவதில் ஆங்கிலேய படைக்கும் பிரஞ்சுப் படைக்கும் இடையே மிகப் பெரிய போட்டி நிலவியது. பிரெஞ்சுப் படைகள் ஸ்ரீரங்கத்தில் முகாமிட்டு இருந்தனர்.

கொள்ளிடத்தில் வெள்ளம் வரவே, ஆங்கிலப் படை வீரர்கள் சமயபுரத்தில், தங்கள் ஆளுநர் இராபர்ட் கிளைவ், மற்றும் தளபதிகளான ஜின்ஜின், டால்டன், லாரன்ஸ் ஆகியோருடன் தங்கி இருந்தனர். தாங்கள் கொண்டுவந்திருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளைக் கொட்டகை அமைத்துப் பாதுகாத்தனர். எனவே இரவு நேரத்தில் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று தடை உத்தரவு போட்டனர்.

ஒருநாள், தளபதி ஜின்ஜின் நள்ளிரவில் ஆயுதங்கள் இருந்த கொட்டகையைப் பாதுகாக்க சுற்றி வந்து கொண்டு இருந்தான். அப்போது மஞ்சள் ஆடை உடுத்தி, ஒரு பெண் தனது இரண்டு கைகளிலும் தீச்சட்டி ஏந்திச் சென்றாள். யார் நீ ? நில் என்று கத்தினான் ஜின்ஜின் . ஆனால், அவனது குரலைப் பொருட்படுத்தாமல் அந்தப் பெண் சென்றாள். உடனே ஜின்ஜின் தன் கைத்துப்பாக்கியை எடுத்து அப்பெண்ணை நோக்கிச் சுட்டான். அப்போதுதான் ஓர் அதிசயம் நிகழ்ந்தது.

துப்பாக்கித் தோட்டாக்கள் அனைத்தும் பூக்களாக மாறி, அந்தப் பெண்ணின் தலையில் விழுந்தன. துப்பாக்கிச் சத்தம் கேட்டு வெளியே வந்த ஊர் மக்கள் ஜின்ஜின்னிடம், ‘தவறு செய்துவிட்டீர்கள், எங்கள் காவல் தெய்வம் மாரியம்மனை சுட்டுவிட்டீர்கள்’ என்று கூறினர். இதை நம்பிடாமல் ஜின்ஜின் வேகமாக ஆலயத்துக்கு ஊர்மக்களுடன் சென்று பார்த்தான். அப்போது கருவறையில் அம்மன் இல்லை.

திடீரென ஒரு பேரொளி கருவறையை நிரப்பியது. பீடத்தில் மீண்டும் அம்மன் வந்தமர்ந்தாள். அனைவரும் விழுந்து வணங்கினர். ஆனால், ஜின்ஜினுக்கு கண்பார்வை பறிபோய் இருந்தது. பின்னர் ஊர்மக்களின் அறிவுரையைக் கேட்டு மாரி அம்மனிடம் மன்னிப்பு கேட்டான் . மூன்று நாள் கழித்து கண்பார்வை பெற்றான். இந்த நிகழ்வில் இருந்து அம்மனுக்கு பூச்சொரிதல் விழாவானது வெகு சிறப்பாக நடைபெறுகிறது.

மற்றொரு விஷயமும் பூச்சொரிதல் வைபவத்தின் பின்னணியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

உலக நன்மைக்காகவும், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களின் நலனுக்காகவும் சிவபெருமானை வேண்டி மாசி கடைசி ஞாயிறு முதல், பங்குனி கடைசி ஞாயிறு வரை, 28 நாட்கள் அம்மன் பச்சைப்பட்டினி விரதம் மேற்கொள்கிறாள். விரத நாட்களில் அம்மனுக்கு வழக்கமான தளிகைக்குப் பதிலாக துள்ளு மாவு, வெள்ளரிப் பிஞ்சு, பாசி பருப்பு, இளநீர் வகைகளே படையலாக வைத்து படைக்கப்படுகின்றன . பக்தர்களும் விரத உணவை மட்டுமே உண்கிறார்கள்.

அம்மன் விரதம் இருக்கும் நாட்களில் அம்மன் மனதை குளிர்ச்சி செய்யவே பூச்சொரிதல் விழா நடைபெறுவதாகவும் சொல்லப்படுகிறது.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த சமயபுரம் மாரியம்மன் திருத்தலம் உருவான வரலாற்றைப் பற்றிப் பார்ப்போம்.

திருக்கடையூரில் எமனிடம் இருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள நினைத்த மார்க்கண்டேயர் சிவபெருமானிடம் சரணடைந்தார்.ஈசனும் காலசம்கார மூர்த்தியாக அவதாரம் எடுத்து எமதர்மனை அழித்தார். இது உலகில் ஜனன மரணத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. நோய்களின் அதிபதியான மாயாசுரன் நோய்களைப் பரப்பினான். மக்களைத் துன்புறுத்தினான். இதைக் கண்டு கோபம் கொண்ட பார்வதி தேவி தன்வடிவமான மாரியம்மனை மாயாசுரனை வதம் செய்ய அனுப்பினாள்.

மாரியம்மன் மாயாசுரனையும், அவனது சகோதரர்களையும், வதம் செய்தாள். பின்னர் அவர்களின் தலையை ஒட்டியாணமாக அணிந்து நோய்களின் கொடுமைகளிலிருந்து மக்களைக் காப்பாற்றி அருள் புரிந்தார்.

பின்பு ஈசனின் அருளுடன் தனது தமையன் ஸ்ரீரங்கநாதர் திருக்கோயிலில் முதலில் ・வைஷ்ணவி・தேவியாக அமர்ந்தாள். பின்னாளில் சமயபுரத்தில் வந்து மாரியம்மனாக வீற்றிருக்கிறாள். மாரியம்மன் தனது எட்டுக் கரங்களில் இடப்புறமாக கபாலம், மணி, வில், பாசம், வலப்புறமாக கத்தி, சூலம், அம்பு மற்றும் உடுக்கை ஆகிய ஆயுதங்களைத் தாங்கியுள்ளாள். இடதுகாலை மடக்கி வைத்து வலது காலை தொங்கவிட்ட நிலையில் மாயாசுரனின் தலைமீது கால் பதித்து ,அமர்ந்து பக்தர்களின் குறைகளை தீர்த்து வருகிறாள்.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial