கிழக்கு கடற்கரை சாலையையொட்டிய பகுதிகளை பாதுகாக்கப்பட்ட பறவைகள் வாழிடமாக அரசு அறிவிக்க பாமக வலியுறுத்தல்!

சென்னையை ஒட்டியுள்ள கிழக்குக் கடற்கரைச் சாலைப் பகுதியில் இயற்கையாக அமைந்துள்ள நீர்நிலைகள் உள்ளிட்ட காரணங்களால் அப்பகுதியில் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் வலசை வந்து செல்கின்றன. அவற்றை பாதுகாப்பதன் மூலம் கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதியை பறவைகள் வாழிடமாக மாற்றுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ள நிலையில், அந்தச் சூழலை சீர்கெடுக்கும் வகையிலான நிகழ்வுகள் அப்பகுதியில் பெருமளவில் நடந்து வருவது கவலையளிக்கிறது.

சென்னை மாவட்டமும், ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்டமும் ஏரிகளுக்கு பெயர் பெற்றவை. நீர் நிறைந்த ஏரிகளும், அவற்றையொட்டிய தாவரங்கள் நிறைந்த பகுதிகளும் அப்பகுதிகளை பறவைகள் வாழிடமாக மாற்றியுள்ளன. இந்தச் சூழலுக்கு வலிமை சேர்க்கும் வகையில் கடலுடன் இணைந்திருக்கும் உப்பங்கழிகள், காப்புக்காடுகள் ஆகியவை கிழக்குக் கடற்கரைச் சாலைப் பகுதியை பறவைகளுக்கு சொர்க்கபுரியாக மாற்றியிருக்கின்றன. ஆனால், இந்த சூழல் வேகமாக சீரழிந்து வருவது கவலையளிக்கிறது. முட்டுக்காட்டில் தொடங்கி கிழக்குக் கடற்கரைச் சாலைக்கும், பழைய மாமல்லபுரம் சாலைக்கும் இடைப்பட்ட பகுதி கேளம்பாக்கம் உப்பங்கழி என்றழைக்கப்படுகிறது. கைவிடப்பட்ட உப்பளங்கள் அதிகம் உள்ள இந்தப் பகுதியில் பொரி மீன்கொத்தி, சாம்பல் கூழைக்கடா, நீர்க்காகம், சாதா உள்ளான், குளக்கொக்கு, உப்புக் கொத்திகள், ஆலா (Pied Kingfisher. Spot billed Pelicans, Cormorants, Common Sandpipers, Pond Herons, Plovers, Terns) வெளிநாட்டு பறவைகள் அதிகம் வந்து செல்கின்றன. அதிகாலை வேளையில் இப்பகுதியிலும், கிழக்கு கடற்கரையிலும் இவற்றின் நடமாட்டத்தை காண்பதே பேரானந்தமாகும். பள்ளிக்கரணை சதுப்பு நிலம், அதையொட்டிய பெரும்பாக்கம் சதுப்பு நிலம் ஆகியவை பறவைகளுக்கு பெரும் வரம் ஆகும். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் பெரும்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு விட்டது; ஒரு பகுதி குப்பை மேடாகி விட்டது என்றாலும் கூட அங்கு வெளிநாட்டு பறவைகள் வருவது குறையவில்லை. பள்ளிக்கரணை மற்றும் பெரும்பாக்கம் சதுப்பு நிலத்தில் சுற்றுச்சூழல் மாசு, ஒலி மாசு ஆகிய அனைத்து தீமைகளும் இருந்தாலும் கூட அவற்றை சகித்துக் கொண்டு யுரேஷியா கழுகு ஆந்தை, கோனமூக்கு உள்ளான். தட்டைவாயன் வாத்து, நாமத்தலை வாத்து, ஊசிவால் வாத்து, கரண்டி வாயன், நீலத்தாழைக் கோழி, நைட் ஹெரான், நீர்க்காகம், நாமக்கோழி, மஞ்சள் குருகு, நெடுங்கால் உள்ளான் (Eurasian Eagle Owl. Pied Avocet, Northern Shoveler. Eurasian Wigeon. Northern Pintail, Eurasian Spoonbill. Purple moorhen, Night heron, Little Cormorant, Common Coot, Yellow bittern. Black winged Stilt) ஆகிய பறவைகள் அதிக அளவில் வந்து இந்த சதுப்பு நிலங்களுக்கு அழகும், பெருமையும் சேர்க்கின்றன.

சிறுதாவூர் ஏரியும், அதையொட்டியுள்ள காடுகளும் உலகப் பறவைகளை ஒவ்வொரு ஆண்டும் வரவேற்று விருந்து படைக்கின்றன. தோல்குருவி, சிவப்பு சில்லை, ரோஸ்ட்ராடுல்டே, (Oriental Pratincole, Red Avadavat, Painted Snipe, harriers, Common Pochard, Tufted Duck) செல்லும் பறவைகள் ஆகும். அதேபோல், நன்மங்கலம் காப்புக்காடு பகுதியில் யுரேஷியா கழுகு ஆந்தைகள் அதிக அளவில் முகாமிடுவது வழக்கம். கோவளம், பனையூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பெரிய சீழ்க்கை சிரவி, வர்ணம் பூசப்பட்ட நாரை, சாம்பல் கூழைக் கடா, நீர்க்காகம், பாம்பு பறவைகள், கருந்தலை அரிவாள் மூக்கன், பெரிய உள்ளான், காஸ்பியன் ஆலா (Larger whistling teal, painted storks, spot billed pelicans, cormorants, darters, black headed ibises, Godwit. and Caspian tern) வந்து செல்கின்றன. இவை தவிர்த்து கிழக்குக் கடற்கரை சாலையின் அனைத்து பகுதிகளுக்கும் பிளமிங்கோ பறவைகள் ஆயிரக்கணக்கில் வந்து செல்கின்றன. வேடந்தாங்கல் சரணாலயத்திற்குக் கூட செல்லாத பிளமிங்கோ பறவைகள் பத்தாயிரம் கிலோமீட்டருக்கும் அதிக தொலைவை கடந்து கிழக்கு கடற்கரைச் சாலை பகுதிக்கு வந்து செல்வது குறிப்பிடத்தக்கதாகும். பறவைகள் வருகைக்கு ஏற்ற இந்த சூழல் பாதுகாக்கப்பட வேண்டும்.கிழக்குக் கடற்கரைச் சாலையையொட்டிய பல பகுதிகளுக்கு வெளிநாட்டுப் பறவைகள் படையெடுப்பதை பல தருணங்களில் நானே பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். கிழக்குக் கடற்கரை சாலை பகுதிகளுக்கு பறவைகள் அதிக அளவில் வந்து செல்வது இயற்கை நமக்கு அளித்த கொடை ஆகும். ஆனால், இந்தக் கொடையை தக்கவைத்துக் கொள்ள அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக, அதை அழிப்பதற்கான செயல்கள் தான் அதிக அளவில் அரசால் மேற்கொள்ளப்படுகின்றன.பறவைகள் வந்து செல்லும் பகுதிகளில் கட்டுப்படுத்தப்படாத போக்குவரத்துக் காரணமாக மிகப்பெரிய அளவில் ஒலிமாசு ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, கிழக்குக் கடற்கரை சாலைப்பகுதிகளில் செயல்படும் முறைப்படுத்தப்படாத கேளிக்கை விடுதிகளில் இரவு முழுவதும் நடத்தப்படும் கொண்டாட்டங்கள், இரைச்சல் மிகுந்த இசை நிகழ்ச்சிகள், பட்டாசு வெடிக்கும் நிகழ்வுகள் போன்றவை வெளிநாட்டு பறவைகளை அச்சுறுத்தி அங்கிருந்து விரட்டுகின்றன. இவற்றை அனுமதிப்பது பெரும் குற்றம் ஆகும்.இவை அனைத்திற்கும் மேலாக கோவளம் பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன் தொடங்கப்பட்ட ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை பறவைகளின் வருகைக்கு முற்றிலுமாக முடிவு கட்டிவிடும் ஆபத்து உள்ளது. தமிழ்நாட்டின் புகழ்பெற்ற பறவைகள் சரணாலயமான வேடந்தாங்கலில் பட்டாசு வெடிக்கவே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கோவளம் உள்ளிட்ட கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதிகளில் தாங்க முடியாத இரைச்சலுடன் ஹெலிகாப்டர்கள் தாழ்வாக பறந்து செல்ல அரசு எவ்வாறு அனுமதிக்கிறது? என்பது தெரியவில்லை. இதன் மூலம் பறவைகளுக்கு பெரும் தீமையை தமிழக அரசு இழைக்கிறது.நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்… நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்ற தத்துவத்தின்படி கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதிக்கு வரும் பறவைகளை பாதுகாக்க இனியாவது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதியை பாதுகாக்கப்பட்ட பறவைகள் வாழிடமாக அறிவிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, வேடந்தாங்கல் பகுதியில் நடைமுறை பயன்படுத்தப்படும் அனைத்து விதிகளையும் இங்கும் நடைமுறைப்படுத்தி, அங்கு மேற்கொள்ளப்படும் ஹெலிகாப்டர் சுற்றுலா, அமைதியையும், சூழலையும் கெடுக்கும் கொண்டாட்டங்கள், ஒலிமாசுவை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி தெரிவித்து உள்ளார்.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial