“பத்துரூபாய், இருபதுரூபாய்” நாணயங்கள் செல்லும் வாங்க மறுத்தால் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை,
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் ரூ.10, ரூ.20 நாணயங்களை வாங்க மறுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் எச்சரித்துள்ளார்.
இந்திய அரசின் பழைய நோட்டுகள் மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, ரிசர்வ் வங்கி ரூ.10, ரூ.20 நாணயங்களை அதிகளவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வெளியிட்டுள்ளது. முதலில் இந்த நாணயம் மக்களிடையே அதிகளவு புழக்கத்தில் இருந்தது.
ஆனால் வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் ரூ.10, ரூ.20 நாணயங்கள் செல்லாது என்ற வதந்தியால் சில பொதுமக்கள், வியாபாரிகள் வாங்க மறுப்பதாக தெரிய வருகிறது.
இது வெறும் வதந்தி. ரூ.10, ரூ.20 நாணயங்கள் செல்லுபடியாகும். அனைத்து வங்கிகளிலும் அரசாங்க அலுவலகம் ரூ.10, ரூ.20 நாணயங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளது.
எனவே மக்கள் எந்தவிதமான தயக்கமின்றி ரூ.10, ரூ.20 நாணயங்களை வாங்கலாம். மேலும் ரூ.10, ரூ.20 நாணயங்கள் ஏற்க மறுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.