பருவநிலை மாற்றத்துக்கான காரணிகளை கண்டறிந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்; அன்புமணி ராமதாஸ்!
சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியின் சமூகவியல் துறை மற்றும் பசுமை தாயகம் அமைப்பு சார்பில் நடந்த காலநிலை மாற்றம் மற்றும் பாலின சமத்துவம் தொடர்பான கருத்தரங்கில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், பருவநிலை மாற்றத்தால் திடீரென்று ஒரே இடத்தில் பல சென்டிமீட்டர் அளவு மழை பெய்கிறது. அதுதான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவலாஞ்சி, தூத்துக்குடியின் காயல்பட்டினம் போன்ற இடங்களில் ஏற்பட்டது. பருவநிலை மாற்றத்துக்கான காரணிகளை கண்டறிந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இது அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தி பருவநிலை மாற்றங்களை தடுப்பதற்கான சட்டங்களை உருவாக்க வழிவகுக்கும். ஆண்டுதோறும் சென்னையில் மழையால் மக்கள் பாதிக்கப்படக்கூடிய சூழல் உருவாகிறது. பல குடும்பத்தினர் வீட்டை விட்டு பல நாட்கள் வெளியில் சென்று தங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் ஏற்படும் மழை வெள்ளத்தால் உடைமைகளை இழக்கும் சூழலும் ஏற்படுகிறது. இவற்றுக்கெல்லாம் காலநிலை மாற்றம்தான் முக்கிய காரணம் என்றார்.