உணவு பொருள் உற்பத்தியாளர்களுக்கு அதிர்ச்சி தகவல்
இனி ஆண்டுதோறும் லைசென்ஸ் புதுப்பிக்கணும்”
மத்திய அரசின் உணவு பாதுகாப்பு துறையின் கீழ், ஐந்தாண்டுகள் வரை ‘லைசென்ஸ்’ வழங்கிய நிலையில், தற்போது ஆண்டுதோறும் ‘லைசென்ஸ்’ புதுப்பிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
உணவு தானியம், மாவாக அரைப்பது, தின்பண்டம், பேக்கிங் உணவு தயாரிப்பு உட்பட எந்த வகையான உணவு தயாரிப்பில் ஈடுபடுபவர்களும், பொருளை வாங்கி பேக்கிங் செய்து விற்பவர்களும் ஆண்டுதோறும் ‘லைசென்ஸ்’ புதுப்பிக்க வேண்டும். ஆண்டுக்கு ரூ.12 லட்சத்திற்கு மேல் விற்பனை இருந்தால் ‘லைசென்ஸ்’ எடுக்க வேண்டும்.
அதற்கு குறைவாக இருந்தால் ஆண்டுக்கு ரூ.100 செலுத்தி பதிவுச்சான்றிதழ் பெறலாம்.
ரூ.500 செலுத்தினால் ஐந்தாண்டுகளுக்கு பதிவுச் சான்றிதழ் பெறலாம்.
‘லைசென்ஸ்’ பெற ஓராண்டு கட்டணம் ரூ.2000. 3 ஆண்டுகளுக்கு ரூ.6000, 5 ஆண்டுகளுக்கு ரூ.10ஆயிரம் செலுத்தி 3 முதல் 5 ஆண்டுகளுக்கு ‘லைசென்ஸ்’ பெறும் வசதி தற்போது மாற்றப்பட்டுள்ளது.
2023, ஜன.,12 லிருந்து புதிய நடைமுறை படி, இனி ஆண்டுதோறும் ‘லைசென்ஸ்’ புதுப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜன.,11க்கு முன்னதாக, ஐந்தாண்டுகளுக்கான ‘லைசென்ஸ்’ பெற்றிருந்தால் ஆண்டுதோறும் விண்ணப்பிக்க தேவையில்லை.
ஏற்கனவே 3 முதல் 5 ஆண்டுகளுக்கு ‘லைசென்ஸ்’ பெற்றவர்களின் உரிமம் காலாவதியாகும் பட்சத்தில் ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டும்.
பதிவுச்சான்றிதழ் அல்லது ‘லைசென்ஸ்’ இல்லாமல் தொழில் செய்தால் 6 மாத சிறை, ரூ.ஒரு லட்சம் அபராதம் விதிக்கலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளையும் அறிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி பொருட்களின் பேக்கிங் லேபிளில் உற்பத்தி தேதி, காலாவதி, தயாரிக்கும் இடம், முகவரி, அலைபேசி உள்ளிட்ட 16 வகையான தகவல்கள் இடம்பெற்றிருக்க வேண்டும். லேபிளில் தகவல்கள் முழுமையாக இல்லாவிட்டால் டி.ஆர்.ஓ., நீதிமன்றம் மூலம் ரூ. 2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
காலாவதி தேதிக்கு முன்பாக ‘லைசென்ஸ்’ புதுப்பித்து அபராதத்தில் தப்பிக்கலாம் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.