ஒவ்வொரு ஆண்டும் தடயவியல் துறைக்கு 30 ஆயிரம் இளைஞர்கள் தேவைப்படுவார்கள்; அமித்ஷா!
குஜராத் மாநிலம் ஆமதாபாத் மாவட்டம் ஜெதல்பூரில் உள்ள நாராயண சாஸ்திரி தொழில்நுட்ப நிறுவனத்தில் நடைபெற்ற விழாவில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- தற்போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய குற்றவியல் சட்டத்தின்படி 7 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய அனைத்து குற்றங்களிலும் ‘தடயவியல் நிபுணர்’ மூலம் குற்றம் நடந்த இடத்தில் சாட்சியங்களை சேகரிப்பது கட்டாயமாக்குகிறது. புதிய சட்டங்களுக்கு முன்கூட்டியே தயாராவதற்காக தடயவியல் நிபுணர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக 2020-ம் ஆண்டு தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகத்தை அமைத்தது. ஒவ்வொரு குற்றச் சம்பவத்திற்கும் தடய அறிவியல் அதிகாரிகள் கட்டாயமாகும் போது, ஆயிரக்கணக்கான நிபுணர்கள் தேவைப்படுவார்கள். எனவே அடுத்த ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் தடயவியல் துறைக்கு 30 ஆயிரம் இளைஞர்கள் தேவைப்படுவார்கள். அதற்கேற்ப வேலைவாய்ப்பும் அமையும். இவ்வாறு அவர் பேசினார்.