‘பாரத் ரத்னா’ புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்த நாள் விழா!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது:-பேரன்பிற்குரிய கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும். உலகெங்கும் வாழுகின்ற ‘பொன்மனச் செம்மல்’ புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் கோடானு கோடி தொண்டர்களுக்கும், புரட்சித் தலைவரின் பிறந்த நாள் மடல் மூலமாக எனது அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.சரித்திரத்தின் ஏடுகளில் சாகா வரம் பெற்றுள்ள நம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் 107-ஆவது பிறந்த நாளை காலம் பெருமிதத்தோடு நினைவு கூறுகின்ற பொன்னான நேரமிது. ஒரு மனிதர் மறைந்த பிறகும் நீண்ட காலம் நினைக்கப்படுகிறார் என்றால் அவர் நல்ல மனிதர்; மறைந்து பல ஆண்டுகள் கழித்தும் மக்கள் மனங்களில் ஒரு மனிதர் சிம்மாசனமிட்டு அமர்ந்து, உள்ளங்களை ஆட்சி செய்கிறார் என்றால், காலத்தால் வெல்லப்பட முடியாத நாயகராக வீற்றிருக்கிறார் என்றால் அவர் மாமனிதர்; அவரே மனிதருள் மாணிக்கம்; அவர் தான் நம் புரட்சித் தலைவர்.கோடான கோடி தொண்டர்களும், மக்களும் புரட்சித் தலைவரை கடவுளாய் வணங்குவதும்; இன்று திரைத் துறைக்கு வருவோரும் புரட்சித் தலைவரைப் போல் புகழ்பெற வேண்டும் என்று முயல்வதும்; இன்று அரசியல் களம் வருவோரும் புரட்சித் தலைவர் பாதையில் நடப்போம் என்று சூளுரைப்பதும்; அந்த மாபெரும் மாமனிதர் வாழ்ந்த காலத்தில் எப்பேர்பட்ட பெருவாழ்வு வாழ்ந்தார் என்பதற்கான சாட்சியங்களாய் நீள்கின்றன.கொடூர வறுமையின் கோரப் பிடியில் பிறந்து, தன் உழைப்பால், தன் ஆற்றலால், தனது விடா முயற்சியால் வறுமையில் இருந்து மீண்டு, யாரும் தொடாத புகழின் உச்சத்தைத் தொட்டு நின்ற நாளிலும், மக்கள் வறுமையைக் களைய வேண்டும் என்று அரசியல் களம் புகுந்து அதிலும் வென்று காட்டிய புரட்சித் தலைவரின் புகழ் வாழ்க்கை சொல்லச் சொல்லதீராத காவியம்!

பேரறிஞர் அண்ணாவின் இதயக்கனி, பேரறிஞர் பாதையிலேயே அரசியல் பயணம் தொடங்கி, அண்ணா கண்ட திமுக, ஆட்சியில் அமர ஒரு அரசியல் புரட்சியையே தமிழ் நாட்டில் நடத்திக் காட்டினார். அண்ணாவின் இதயத்தில் நீங்கா இடம்பெற்று நின்றார். அண்ணாவின் மறைவிற்குப் பிறகு, எந்த மக்கள் நலனுக்காக அந்த இயக்கம் அண்ணாவால் உருவாக்கப்பட்டு, ரத்தம் சிந்தி வளர்க்கப்பட்டதோ, அந்த மக்களின் நலனுக்கு எதிராகவே தீய சக்திகள் அந்த இயக்கத்தைத் திருப்பிய நேரத்தில், சிறிதும் தயக்கமின்றி தர்மத்தின் துணைகொண்டு தீய சக்தியை எதிர்த்து நின்றார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார். தமிழ் நாட்டு மக்களின் பேராதரவோடு மூன்று முறை முதலமைச்சராகப் பதவியேற்று மாசற்ற மக்கள் பணி ஆற்றினார்.

“எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்”

என்கிற வள்ளுவரின் குறளுக்கு கண்முன் வாழ்ந்த சாட்சி நம் புரட்சித் தலைவர் அவர்கள். எதுவெல்லாம் அவரால் முடியாது என்று சொன்னார்களோ, அதையெல்லாம் செய்துகாட்டி புகழ் கோபுரத்தின் உச்சிக்குச் சென்றவர் புரட்சித் தலைவர்.

‘தர்மம் தலைகாக்கும்’ என்பார்கள். அவர் செய்த தர்மம் அவர் தலையை மட்டுமல்ல, அவரின் தலைமுறையையே காக்கிறது. அவர் தொடங்கிய கழகம், அவர் மறைந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் எதிரிகளாலும், துரோகிகளாலும் வீழ்த்தப்பட முடியாதபடி அவர் செய்த தர்மம் காத்து நிற்கிறது. அள்ளி அள்ளிக் கொடுத்த வள்ளல் கரங்களுக்குச் சொந்தக்காரர் புரட்சித் தலைவர். தமிழ் குறிப்பிடுகிற கடையேழு வள்ளல்கள் குறித்தும், மகாபாரத இதிகாசம் சொல்கிற வள்ளல் கர்ணன் குறித்தும் நாம் கதைகளைக் கேட்டறிந்து இருக்கிறோம். ஆனால், அவர்களின் வள்ளல் தன்மை இப்படித்தான் இருந்திருக்குமோ என்று, மக்கள் தாங்கள் வாழ்கிற காலத்தில் ஒரு தெய்வத்தை தரிசித்தார்கள் என்றால் அது நமது பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் அவர்களைத்தான். இன்றைக்கும் உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் பேருவகையோடு நோக்குகிற, “தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தை” தன்னுடைய தமிழ் மீதான ஆர்வத்தாலும், தொலைநோக்காலும் உருவாக்கி உயிர் கொடுத்தவர் புரட்சித் தலைவர் அவர்கள்.

இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு பேரறிஞர் அண்ணா கண்டார். அவரின் பாதையிலேயே அரசியல் நடத்திய புரட்சித் தலைவர் 5-ஆம் உலகத் தமிழ் மாநாட்டை உலகே வியக்கும் வண்ணம் நடத்திக் காட்டினார். ஏழை, எளிய மக்கள் உள்ளம் குளிர்ந்ததும் புரட்சித் தலைவரின் ஆட்சியில்தான். அவர்கள் குடில்களில் மின்சார விளக்குகள் எரிந்ததும் அவரின் பொற்கால ஆட்சியில்தான். பரம்பரை பரம்பரையாய் அதிகாரம் செலுத்தி வந்த நிலையை, வாரிசுகள் அதிகாரம் செலுத்தும் கிராம முன்சீப் பதவி முறையை ஒழித்து, தகுதி உள்ளவர்கள் அதிகாரத்திற்கு வரும் கிராம நிர்வாக அலுவலர்கள் தேர்வு முறையைக் கொண்டுவந்து தமிழ் நாட்டில் குடியாட்சிக்கு வலுசேர்த்தவர் நம் புரட்சித் தலைவர் அவர்கள். இந்திய மாநிலங்களில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு தமிழ் நாட்டில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின சகோதர, சகோதரிகள் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டினை இன்று பெற்றிருக்கிறார்கள் என்றால் அதற்கு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் எடுத்த உறுதியான மனிதநேயமிக்க சமூக நீதியை நிலைநாட்டும் 68 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் முடிவுதான் காரணம். புரட்சித் தலைவரின் இந்த முயற்சியை அரசியல் சட்டத்தின் 9-ஆவது அட்டவணையில் இடம்பெறச் செய்து “சமூக நீதிகாத்த வீராங்கனை” என்ற போற்றுதலுக்கு உரியவரானார் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.ஒன்றா, இரண்டா சாதனைகள் ? புரட்சித் தலைவர் இந்த நாட்டில் செய்து காட்டிய சாதனைகளை ஒரு மடலில் சொல்லிவிட முடியாது. அந்த மாபெரும் மக்கள் தலைவர் காட்டிய பாதையில் நாம் பெருமையுடன் நடைபோடுகிறோம். அந்த மாசற்ற தலைவர் உருவாக்கிய இயக்கத்தை புரட்சித் தலைவி அம்மாவின் காலத்திற்குப் பிறகு எதிரிகளும், துரோகிகளும் சூறையாட முனைந்த நேரத்தில், புரட்சித் தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களான; புரட்சித் தலைவியின் போர்ப்படை வீரர்களான உங்கள் அனைவரின் துணையோடு அவர்களை வீழ்த்தி, நாம் அனைவரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கட்டிக் காத்து வருகின்றோம்.தற்போது, தமிழ் நாட்டில் நிலவுகின்ற விடியா தி.மு.க. அரசு மக்களை வாட்டி வதைக்கின்ற கொடுங்கோல் ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறது. மின்சாரக் கட்டணம், வீட்டுவரி, பால்விலை என சகலத்தையும் உயர்த்தி மக்களை வதைத்துக் கொண்டிருக்கிறது. மக்கள் பணத்தைக் கொள்ளையடித்து பெரும் ஊழல்களில் திளைக்கின்ற காரணத்தால், முறையான திட்டங்களை வகுக்க முடியாமல், இயற்கைப் பேரிடர்களிலும் மக்களைக் காக்க முடியாமல், மக்களை அழிக்கின்ற அழிவு சக்தியாக விடியா திமுக அரசு மாறி இருக்கிறது.புரட்சித் தலைவரின் பிறந்த நாளை முன்னெடுக்கின்ற கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது புகழை மக்கள் மன்றத்தில் கொண்டு சேர்க்கும் வகையில் பொதுக்கூட்டங்கள் நடத்துவதோடு மட்டுமின்றி, இன்றைக்கு இந்தப் பெருந்துயரால் பாதிக்கப்பட்டு ஆட்சியாளர்களால் கைவிடப்பட்டு நிற்கின்ற லட்சக்கணக்கான மக்களின் வாழ்வைப் பாதுகாக்கின்ற வகையில் அவர்களோடு தோளோடு தோள் நின்று, முடிந்தவரை நலத் திட்ட உதவிகளை நல்கி, எப்போதும் போல் கழகம் மக்களோடு நிற்கிறது என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்த வேண்டும் என்று பேரன்போடு கேட்டுக்கொள்கிறேன்.அதே நேரத்தில், இந்த விடியா தி.மு.க. அரசின் கொடுங்கோன்மைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான நாள் நெருங்குகிறது. வந்திருக்கும் தை மகள் நல்லதொரு வழியைக் காட்டுவாள். தமிழ் நாட்டு மக்கள் தேர்தல் களத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை மகத்தான வெற்றிபெறச் செய்வார்கள். புரட்சித் தலைவரின் பிறந்த நாளில் தீய சக்திகளை தேர்தல் களத்தில் அப்புறப்படுத்த, கழக நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும் சூளுரை ஏற்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.புரட்சித் தலைவரின் பெரும் புகழ் இன்னும் பல்கிப் பெருகி வளரும். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அவர் மக்கள் உள்ளங்களில் மாமனிதராய், மனிதருள் மாணிக்கமாய் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பார் என்பதில் எள் அளவும் ஐயமில்லை.பேரறிஞர் அண்ணா புகழ் வாழ்க! புரட்சித் தலைவரின் புகழ் வாழ்க!புரட்சித் தலைவி அம்மா புகழ் வாழ்க!அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெல்க!!!

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial