பால் முகவர்களை தற்கொலைக்கு தூண்டும் ஆவின்! – பொன்னுசாமி!
ஆவின் பால் விற்பனையை பால் முகவர்களாகவே புறக்கணிக்கட்டும் என்பதற்காகவே இப்படி செய்து வருகிறார்களோ என சந்தேகம் கிளப்பியுள்ளது பால் முகவர்கள் சங்கம்.
சென்னை : பால் முகவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தி, ஆவின் நிர்வாகம் தற்கொலைக்கு தூண்டுவதாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்
கெட்டுப்போன பாலிற்கான இழப்பை ஈடுசெய்வதற்கான எந்த ஒரு உத்தரவாதத்தையும் தராததால் கடுமையான பொருளாதார இழப்பை பால் முகவர்கள் சந்தித்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை மாவட்டத்தில் நேற்று (21.02.2023) செவ்வாய்க்கிழமை காலையில் விநியோகம் செய்யப்பட்ட ஆவின் பசும்பால் பாக்கெட்டுகள், ஆவின் பால் பண்ணையில் இருந்து பால் முகவர்களுக்கு விநியோகம் செய்த போதே பாதிக்கும் மேற்பட்ட பால் பாக்கெட்டுகள், பாக்கெட்டுக்குள்ளேயே கெட்டுப் போய் தயிரைப் போன்று திரிந்த நிலையில் வந்திருக்கிறது.
முறையான பதில் இல்லை இது தொடர்பாக அங்குள்ள பால் முகவர்கள் கோவை மாவட்ட ஆவின் அதிகாரிகளை உடனடியாக தொலைபேசி மூலமும், பகிரி வாயிலாகவும் தொடர்பு கொண்டு புகார் அளித்த நிலையில் நிர்வாகத் தரப்பில் இருந்து தற்போது வரை எந்த ஒரு முறையான பதிலும் கூறாததோடு, கெட்டுப் போன நிலையில் விநியோகம் செய்யப்பட்ட பாலிற்கான இழப்பை ஈடுசெய்வதற்கான எந்த ஒரு உத்தரவாதத்தையும் தராததால் கடுமையான பொருளாதார இழப்பை சந்தித்திருக்கும் பால் முகவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள நிலையில் ஒரு சில பால் முகவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அதிகளவில் பால் கசிவு,,
ஏற்கனவே குறிப்பிட்ட மைக்ரான் அளவை விட மெலிதான பாலிதீன் கவரில் ஆவின் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி செய்யப்படுவதன் காரணமாக பால் பாக்கெட்டுகள் அதிகளவில் லீக்கேஜ் ஆகி பால் முகவர்களுக்கு தொடர்ந்து பெருத்த இழப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது கெட்டுப் போன பாலினையும் விநியோகம் செய்து கூடுதல் இழப்பை உருவாக்கியுள்ள கோவை மாவட்ட ஆவின் நிர்வாகத்தின் மெத்தனப்போக்கிற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
விற்பனையை புறக்கணிப்போம் மேலும் கோவை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (21.02.2023) அன்று காலையில் விநியோகம் செய்யப்பட்ட பாலில் கெட்டுப் போனதாக புகார் தெரிவித்துள்ள பால் முகவர்களுக்கான இழப்பை உடனடியாக ஈடுசெய்ய கோவை மாவட்ட ஆவின் பொதுமேலாளருக்கு நிர்வாக இயக்குனர் அவர்கள் உத்தரவிட வேண்டும் எனவும், ஆவின் நிர்வாகம் இது போன்ற தொடர் மெத்தனப்போக்கினை கடைபிடித்து, பால் முகவர்களுக்கு இழப்பை மட்டுமே ஏற்படுத்திக் கொண்டிருந்தால் ஆவின் பால் விற்பனையை புறக்கணிப்பது குறித்து ஆலோசிக்க நேரிடும் என்பதனை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் எச்சரிக்கையாகவே தெரிவித்துக் கொள்கிறோம்.
சந்தேகம் ஏற்கனவே கடந்த மாதம் ஆவின் நிலைப்படுத்தப்பட்ட பாலின் கொழுப்பு சத்து அளவை 1.0% குறைத்து (4.5%லிருந்து 3.5%ஆக) அதே விற்பனை விலையில், அதே பச்சை நிற பாக்கெட்டில் பசும் பால் என விஞ்ஞான ரீதியாக மக்கள் தலையில் மறைமுகமாக ஒரு லிட்டருக்கு 6 ரூபாய் வரை விற்பனை விலை உயர்வை கோவை மாவட்ட ஆவின் நிர்வாகம் திணித்த போது தமிழ்நாடு அரசு அதனை கண்டு கொள்ளாதது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை ஆவின் பால் விற்பனையை பால் முகவர்களாகவே புறக்கணிக்கட்டும் என்பதற்காகவே ஆவின் நிர்வாகம் ஒவ்வொரு மாவட்டத்திலும் இது போன்ற செயல்பாடுகளை செய்து வருகிறதோ என்கிற சந்தேகம் எழுவதால் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை செயலாளரின் விசாரணைக்கு தமிழக முதல்வர் உத்தரவிட வேண்டும் ” என்று வலியுறுத்தியுள்ளார்.