கலவரத்தால் மூடப்பட்ட கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை மார்ச் முதல் வாரத்தில் இருந்து முழுமையாக திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி..!
சென்னை: கலவரத்தால் மூடப்பட்ட கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியை முழுமையாக திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்த வந்த மாணவி கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி மர்மமான முறையில் மரணமடைந்தார். இது தொடர்பாக நடந்த போராட்டத்தின் போது கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தின் போது போலீஸ் வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தியது மற்றும் பள்ளி பொருட்களை சேதப்படுத்தினர். இது கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி, தொடர்ந்து கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதையடுத்து கள்ளக்குறிச்சியில் தாக்கப்பட்ட பள்ளி சீரமைக்கப்பட்டு விட்டதால், திறக்க அனுமதிக்க கோரி கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை நிர்வகிக்கும் லதா கல்வி அறக்கட்டளை சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளியைத் திறக்க அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது; தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் சிலம்பண்ணன்; நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பத்த உத்தரவுகளின்படி, பள்ளி செயல்பட்டு வருவதாகவும், அமைதியான சூழல் நிலவுவதாகவும் கூறி, மாவட்ட ஆட்சியரின் அறிக்கையை தாக்கல் செய்தார்.
நீதிமன்றம் பிறப்பித்த அனைத்து உத்தரவுகளும் பின்பற்றப்பட்டுள்ளதாகவும், பள்ளியை முழுமையாக திறக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால், எல்.கே.ஜி. முதல் நான்காம் வகுப்பு வரை பள்ளியை திறக்க அனுமதிக்க வேண்டும் என பள்ளி நிர்வாகம் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து மூடப்பட்ட கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியை முழுமையாக திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. குழந்தைகளின் தைரியத்துக்காக பெற்றோரையும் பள்ளி வர அனுமதிக்க வேண்டும். பள்ளியின் மூன்றாவது தளத்துக்கு சீல் வைக்கப்பட்டது நீடிக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பள்ளியை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மாணவியின் தாய் தாக்கல் செய்த இடையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பள்ளியை அரசு கட்டுப்பாட்டில் எடுக்கக் கோரியும், பள்ளியை முழுமையாக திறக்கக் கோரியும் தாக்கல் செய்த மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது. , பள்ளி நிர்வாகம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை 12 வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.