“ஆளுநர்கள் கடமையை உணர்ந்து சட்ட மசோதாக்களுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும்.”உச்சநீதிமன்றம் அறிவுரை.
“ஆளுநர்கள் கடமையை உணர்ந்து சட்ட மசோதாக்களுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும்.”உச்சநீதிமன்றம் அறிவுரை.
டெல்லி : ஆளுநர்கள் தங்களின் கடமையை உணர்ந்து சட்ட மசோதாக்களுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் மீண்டும் அறிவுறுத்தி உள்ளது.
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் முன் நிலுவையில் உள்ள 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க உத்தரவுப் பிறப்பிக்க கோரி அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும் ஆளுநர்கள் ஒரே நாளில் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதாக தெலங்கானா அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
பாஜக ஆளாத மாநிலங்களில் உள்ள ஆளுநர்களும் காலதாமதமின்றி மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க உத்தரவிட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
அதற்கு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மெஹ்தா எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஆளுநர்களுக்கான கடமையை வரையறுக்கும் அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 200ஐ அவர்கள் மனதில் கொள்ள வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
அதன்படி முடிந்தவரை விரைவில் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஆளுநர் முன்பு எந்த மசோதாவும் நிலுவையில் இல்லை என்றும் சில மசோதாக்கள் விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பப்பட்டு இருப்பதாகவும் துஷார் மெஹ்தா கூறியதை அடுத்து நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.