குக்கர் சாதம் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா?
இந்தியாவின் மிகவும் முக்கியமான உணவுப் பொருள் அரிசி. இந்தியர்களால் அரிசி சாதத்தை சாப்பிடாமல் இருக்க முடியாது.
இந்த அரிசி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பலவாறு சமைத்து உண்ணப்படுகின்றன.
பாரம்பரியமாக அரிசியை கொதிக்கும் நீரில் போட்டு வேக வைத்து, அரிசி வெந்ததும் அதிகப்படியான நீரை வடிகட்டிவிட்டு சாப்பிடுவார்கள். நம் முன்னோர்கள் எல்லாம் அரிசியை அப்படி தான் சமைத்து சாப்பிட்டு வந்தார்கள்.
ஆனால் காலத்திற்கு ஏற்ப மக்களும் மாற தொடங்கியுள்ளனர். தற்போது நமது வீட்டு வேலைகளை எளிதாகும் வகையில் பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் அரிசியை எளிதில் மற்றும் விரைவில் சமைக்க கண்டுபிடிக்கப்பட்டது தான் குக்கர்.
தற்போது பெரும்பாலானோரின் வீட்டில் குக்கர் சாதம் தான் சமைத்து சாப்பிடுகிறோம்.
ஆனால் குக்கர் சாதம் சாப்பிடுவது நல்லதல்ல என்ற ஒரு கருத்து மக்களிடையே உள்ளது. உண்மையிலேயே குக்கர் சாதம் நல்லதா அல்லது கெட்டதா? இக்கட்டுரையில் குக்கர் சாதம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா, கெட்டதா என்பதைக் காண்போம்.
குக்கர் சாதம் Vs வடித்த சாதம் – இவற்றில் எது நல்லது?
புள்ளிவிவரங்களின் படி, குக்கரில் அரிசியை சமைக்கும் போது, அரிசியின் அமைப்பு காரணமாக குக்கர் சாதம் மிகவும் சுவையாக இருக்கும். மறுபுறம் பாரம்பரியமாக சமைத்து சாப்பிடும் வடித்த சாதம் மிகவும் ஆரோக்கியமானது.
ஏனெனில் இதில் உள்ள ஸ்டார்ச் என்னும் மாவுச்சத்து நீக்கப்படுவதால், இதில் கொழுப்புக்கள் குறைவு. ஸ்டார்ச் தான் ஒருவரது உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய்க்கு முக்கியமான காரணம். நிபுணர்களின் கூற்றுப்படி, இவற்றில் நீரில் கரையக்கூடிய கார்போஹைட்ரேட் மற்றும் புரோட்டீன் சத்துக்களும் குறைவான அளவிலேயே உள்ளன.
குக்கர் சாதத்தின் ஆரோக்கிய நன்மைகள்
குக்கர் சாதத்தை சாப்பிடுவதால் சில ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன.
அந்த நன்மைகள் பின்வருமாறு:
- குக்கர் சாதம் செரிமானத்திற்கு நல்லது.
- குக்கரில் அரிசியை சமைக்கும் போது புரோட்டீன், ஸ்டார்ச் மற்றும் நார்ச்சத்து போன்ற சத்துக்கள் உடலுக்கு கிடைக்கும்.
- அதிக அழுத்தத்தில் சாதத்தை சமைக்கும் போது, அரிசியில் உள்ள பூஞ்சை மற்றும் பிற பாக்டீரியாக்கள் அழிக்கப்படுகின்றன. முடிவு
புள்ளி விவரங்களின் படி, வடித்த சாதத்தைக் காட்டிலும், குக்கர் சாதம் அதிக நன்மைகளைக் கொண்டுள்ளது மற்றும் சமைக்கும் நேரமும் மிச்சப்படுகிறது.
அதற்காக வடித்த சாதம் குறைவான நன்மைகளை வழங்குகிறது என்று கூற முடியாது.
அதுவும் குக்கர் சாதத்திற்கு இணையான நன்மைகளை வழங்குகிறது.
ஆனால் என்ன சர்க்கரை நோயாளிகள் குக்கரை சாதத்திற்கு பதிலாக வடித்த சாதம் சாப்பிடுவது தான் நல்லது.
அதேப் போல் உடல் பருமனைக் குறைக்க நினைப்பவர்களும் வடித்த சாதம் சாப்பிடுவதே நல்லது.