இந்தி திணிப்புக்கு எதிராக கொதித்தெழுந்த திமுக நிர்வாகி.. தீக்குளித்து தற்கொலை.. பதற்றம்!
சேலம்: இந்தி திணிப்புக்கு எதிராக சேலம் மாவட்டத்தில் திமுக நிர்வாகி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
மத்திய அரசு இந்தி மொழியை பல்வேறு வழிகளில் திணித்து வருவதாக தமிழக அரசு குற்றம்சாட்டியுள்ளது. இந்தி திணிப்பை எதிர்த்து தமிழக அரசு பல்வேறு போராட்டங்களையும் கண்டனங்களையும் பதிவு செய்துள்ளது.
இந்த நிலையில் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ளது தாழையூர் 18 ஆவது வார்டு திமுக கிளை அலுவலகம். இந்த அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் சேலம் மாவட்டம் நங்கவள்ளி பகுதி தாழையூரைச் சேர்ந்த கழக விவசாய அணி முன்னாள் ஒன்றியப் பொறுப்பாளர் தங்கவேல் கலந்து கொண்டார். அப்போது அவர் இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும் என தங்கவேல் கோரிக்கை விடுத்துள்ளார்.
அங்கிருந்த நிர்வாகிகளும் நிச்சயம் நடத்துவோம் என தெரிவித்துவிட்டு சென்றுவிட்டனர். அப்போது தங்கவேல் மட்டுமே அங்கிருந்ததாக தெரிகிறது. அவர் அங்கிருந்த ஒரு பலகையில் “மத்திய அரசே மோடி அரசே இந்தியை திணிக்காதே, தாய்மொழி தமிழ் இருக்க கோமாளி மொழி இந்தி எதற்கு” என எழுதியுள்ளார்.
அப்போது அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள், அந்த பெரியவரிடம் என்ன செய்கிறீர்கள் என கேட்டுள்ளனர். அதற்கு அவர் இந்தி திணிப்புக்கு எதிராக வாசகம் எழுதியுள்ளேன் என கூறியுள்ளார். இதையடுத்து அவரவர் அவரவர் வேலையை பார்க்க சென்றுவிட்டனர்.
அப்போது திடீரென தங்கவேல் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீவைத்து கொண்டார். அவருடைய அலறல் சப்தம் கேட்டு மக்கள் அங்கு ஓடி வருவதற்குள் தங்கவேலின் உடல் முழுமையாக எரிந்தது. சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.