குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களின் பலன் என்ன?; கேள்வி எழுப்பியது மதுரை ஐகோர்ட்டு!
மதுரையை சேர்ந்த பாலகணேஷ் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அவர் அந்த மனுவில் கூறியிருந்ததாவது:- நெல்லை பாளையங்கோட்டை வன சரகத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வனப்பகுதியில் கண்ணிவெடியை மறைத்து வைத்து புள்ளிமான்களை வேட்டையாடியதாக என் மீதும், நண்பர்கள் மீதும் வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. எனது கார் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படும் நாளில் இருந்து 15 நாட்களுக்கு பின்னர் என் வீட்டில் வைத்து என்னை போலீசார் கைது செய்தனர்.பறிமுதல் செய்யப்பட்ட என்னுடைய காரை ஒப்படைக்கும்படி கேட்டபோது, வனத்துறையினர் மறுத்துவிட்டனர். வனத்துறையினர் பறிமுதல் செய்த காரை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தார். இந்ந மனு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யும் வாகனங்களை போலீஸ் நிலையங்களில் வெகுநாட்கள் நிறுத்தி வைப்பதால் எந்த பயனும் இல்லை. இதுபோன்று பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை தகுந்த உத்தரவாதம் மற்றும் பிரமாண பத்திரம் பெற்றுக்கொண்டு தேவைப்பட்டால் வாகனங்களை விசாரணை கோர்ட்டுகள் திரும்ப கொடுக்க உத்தரவிட வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார்.மேலும், மனுதாரர் 1 லட்சம் ரூபாயை வைப்பு தொகையாக செலுத்த வேண்டும். இனி சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு வாகனத்தை பயன்படுத்தக்கூடாது என்ற நிபந்தனையுடன் வாகனத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு, இந்த வழக்கை முடித்துவைத்தார்.