சந்திராஷ்டமம் என்றால் என்ன? சந்திராஷ்டம நாட்களின் கெடுபலன்கள் இருக்குமா?
சந்திராஷ்டமம் என்ற சொல்லுக்கு சந்திரன் எட்டில் இருப்பது என்று பொருள். ஒரு கிரகம் எட்டில் இருக்கும்போது தனது வலிமையை இழக்கின்றது என்பதை அறிந்த நமது ஞானிகள் கோட்சார நிலையில் ஒருவரின் ராசிக்கு எட்டாமிடத்தில் சந்திரன் மறையும் இரண்டேகால் நாட்களை சந்திராஷ்டம நாட்கள் என்று குறிப்பிட்டு அந்த நாட்களில் முக்கியமான முடிவுகளையோ, புதிய முயற்சிகளையோ, நீண்ட பிரயாணங்களையோ செய்யவேண்டாம் என நமக்கு அறிவுறுத்தினார்கள். இதன் உண்மைக் காரணம் என்னவெனில் சந்திரன் மனதிற்கும், மனம் எடுக்கும் முடிவுகளுக்கும் காரணமானவர் என்பதால் இந்த நாட்களில் மனம் தெளிவற்ற நிலையில் அலைபாய்ந்து கொண்டிருக்கும் நிலையில் நம்மால் முக்கிய முடிவுகள் எதையும் எடுக்க முடியாது என்பதுதான். இந்த சந்திராஷ்டம நிலைக்கும் சில விதிவிலக்குகள் நமது மூலநூல்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. குருவின் பார்வையையோ, சேர்க்கையையோ சந்திரன் பெறும் நாட்களில் ஒருவருக்கு சந்திராஷ்டம நாட்களின் கெடுபலன்கள் இருக்காது என்பது அவற்றில் ஒன்று. சந்திரனின் நீச நிலையை நான் விளக்கியது சந்திராஷ்டமம் நிலைக்கும் பொருந்தும் என்பதால் சூரிய ஒளியைப் பெற்று முழுவலிமையுடன் சந்திரன் இருக்கும் நாட்களிலும் சந்திராஷ்டமம் கெடுபலன் தராது.