தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருப்பதால் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. புயல் உருவாகிறதா?
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில் தமிழகத்தில்பரவலாக மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக வீடுகள் இடிந்து விழுந்திருக்கிறது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்திருக்கிறது.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருப்பதால் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
மாநிலம் முழுவதும் பெய்துவரும் மழையின் காரணமாக, கட்டடங்கள் இடிந்து விழுவது, வீடுகளுக்குள் தண்ணீர் புகுவது போன்ற சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கன மழையின் காரணமாக மேல கடையநல்லூரில் நேற்று முன்தினம் இரவு ஒரு பழைய வீட்டின் கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில் வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
அதே மாவட்டத்தில் மலையடிக்குறிச்சியில் மழையின் காரணமாக கிராம நிர்வாக அலுவலகம் கூரை தொடர்மழையால் இடிந்து விழுந்ததில் ஒருவர் காயமடைந்தார்.
குற்றாலம் அருகே கீழபாட்டை பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 50 ஏக்கர் நெற் பயிர்கள் ஞாயிற்றுக்கிழமையன்று பெய்த பலத்த மழையில் சேதமடைந்தன.
வடகிழக்குப் பருவமழைக் காலம் துவங்கியதிலிருந்தே ஈரோட்டிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. நேற்று இரவில் அந்த மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. தாளவாடி ஓடையின் குறுக்கே உள்ள பாலம் நீரில் மூழ்கியுள்ளது. ஈரோடு பிச்சைக்காரன் பள்ளம் ஓடையில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீர், தடுப்புச் சுவரைத் தாண்டி அருகில் உள்ள மல்லி நகர், அன்னை சத்யா நகர் போன்ற குடியிருப்பு பகுதிகளைச் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் வெளிவர முடியாமல் தவித்து வருகின்றனர்.
மல்லி நகரில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கீழ்தளம் முழுவதும் மழைநீர் சூழ்ந்துள்ளது. பிச்சைக்காரன் பள்ளத்தில் ஏற்பட்ட அடைப்பை நீக்கவும், குடியிருப்பு பகுதியில் உள்ள வெள்ள நீரை வெளியேற்றவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மதுரை நகரில் பல நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மதுரை நகரில் உள்ள காக்காத் தோப்புப் பகுதியில் இருந்த பழைய இரண்டு மாடிக் கட்டடம் ஒன்று நேற்று இரவில் இடிந்து விழுந்தது. அந்த வீட்டின் உரிமையாளர்கள் வெளிநாட்டில் வசிப்பதால், அந்த வீட்டில் யாரும் இல்லை. இதனால், யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தொடர்ந்து பெய்துவரும் மழையின் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள அணைகள் நிரம்பிவருகின்றன. தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் முல்லைப் பெரியாறு, வைகை அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 68 அடியைத் தாண்டியவுடன் முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தற்போது நீர்மட்டம் 69 அடியை நெருங்கியிருக்கும் நிலையில், இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணைக்கு வினாடிக்கு 2310 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. அணையிலிருந்து குடிநீருக்காக மட்டும் 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் மொத்த உயரம் 71 அடி.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கடல் அணை, மாம்பழத்துறையாறு அணை ஆகியவை முழு கொள்ளளவை எட்டியுள்ளன. சிற்றாறு அணைகள், பேச்சிப் பாறை அணை போன்றவை நிறையும் நிலையில் உள்ளன. 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் நீர்மட்டம் 72.13 அடியாக உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் கடனா நதி அணையின் நீர்மட்டம் நேற்று 2 அடியும், ராமநதி அணை, கருப்பாநதி அணை ஆகியவற்றின் நீர்மட்டம் தலா 3 அடியும் உயர்ந்தன. குற்றாலம் பிரதான அருவி, பழைய குற்றாலம் அருவியில் இரண்டாவது நாளாக வெள்ளப் பெருக்கு நீடித்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இன்று சற்று குறைவாக நீர் விழுந்தாலும் குளிப்பதற்கான தடை நீடிக்கப்பட்டிருக்கிறது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 5,000 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து குடிநீருக்கு மட்டும் நீர் திறக்கப்பட்டு வருகிறது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டனம், ராமநாதபுரம், அரியலூர், பெரம்பலூர் பகுதிகளில் இன்று மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.*
கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக ஈரோடு மாவட்டம் பவானியிலும் கன்னியாகுமரி மாவட்டம் சிவலோகத்திலும் 12 செ.மீ மழை பதிவாகியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் 95 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மதுரையில் 85 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
இதற்கிடையில் மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதியில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இந்த வளிமண்டல சுழற்சியானது மேற்கு வட மேற்கு திசையில் தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியை நோக்கி நகர வாய்ப்பிருப்பதாகவும், அதன் காரணமாக நாளை மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இன்று ராயல சீமா மற்றும் கடலோர கர்நாடகா பகுதியில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், இன்று முதல் வருகிற நவம்பர் 9ஆம் தேதி வரை கேரளா மற்றும் மாஹே பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், தெற்கு கர்நாடகாவின் உள் மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது.sourceநன்றி.பிபிசி, தகவல்