2014-ம் ஆண்டுக்கு முன்பு இருந்த பொருளாதார சீர்குலைவு குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல்!
மோடி அரசு பதவிக்கு வந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பு இருந்த பொருளாதார சீர்குலைவு குறித்து ெவள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தனது இடைக்கால பட்ஜெட் உரையில் கூறியிருந்தார். அதன்படி, மக்களவையில் இந்திய பொருளாதாரம் பற்றிய வெள்ளை அறிக்கை என்ற 59 பக்க வெள்ளை அறிக்கையை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-கடந்த 2014-ம் ஆண்டு மோடி அரசு பதவியேற்றபோது, முந்தைய அரசிடம் இருந்து மிகவும் சீர்குலைந்த பொருளாதாரத்தையே பரிசாக பெற்றது. அப்போது, பொருளாதாரம் பலவீனமாக இருந்தது. நிதி நிலவரம் மோசமான வடிவத்தில் இருந்தது. முந்தைய ஆட்சிக்காலத்தில், தவறான பொருளாதார நிர்வாகம், நிதி ஒழுங்கீனம், பரவலான ஊழல் ஆகியவையே காணப்பட்டன. தலைவிரித்தாடிய ஊழல்களால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. நிலக்கரி சுரங்க ஊழல், 2ஜி ஊழல், காமன்வெல்த் போட்டிகள் ஊழல், சாரதா சிட்பண்ட் ஊழல் உள்பட 15 முக்கியமான ஊழல்கள் நடந்தன. நிதி பற்றாக்குறையும், வருவாய் பற்றாக்குறையும் நிலவியது. பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் இருந்தது. வங்கிகள் நலிவடைந்தன. இந்தியாவின் கவுரவம் பாதிக்கப்பட்டதுடன், முதலீட்டாளர்களின் நம்பிக்கை குறைந்தது. விலைவாசி உயர்வால் சாமானியர்கள் பாதிக்கப்பட்டனர். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பொருளாதார நடவடிக்கைகளை முடுக்கிவிட தவறியது. அதற்கு மாறாக, முட்டுக்கட்டைகளை உருவாக்கியது. அவை பொருளாதாரத்தை தடுத்து நிறுத்தின. பொருளாதார விஷயத்தில் தவறான திருப்புதல்களை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மேற்கொண்டது. பலவீனமான தலைமை, உறுதியற்ற நிலைப்பாடு ஆகியவற்றால், ராணுவ தயார்நிலையும் பாதிக்கப்பட்டது. அன்னிய செலாவணி கையிருப்பு வீழ்ச்சியை சரிக்கட்ட அந்த அரசு எடுத்த நடவடிக்கைகள் பின்விளைவை ஏற்படுத்தின. எனவே, மோடி அரசு ஒரு நெருக்கடியான சூழ்நிலையை சந்தித்தது. பொருளாதாரத்தை படிப்படியாக சீரமைத்து, அரசு நிர்வாகத்தை சரி செய்யும் பொறுப்பு மலைக்க வைப்பதாக இருந்தது. எனவே, பொருளாதார நலனுக்காக கடினமான முடிவுகள் எடுக்க வேண்டிய அவசியத்தை மோடி அரசு உணர்ந்தது. முந்தைய அரசைப்போல் இல்லாமல், பொருளாதாரத்தின் அடித்தளத்தில் முதலீடு செய்தோம். வலிமையான கட்டமைப்பை உருவாக்கி, பொருளாதாரத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு வந்தோம். கடந்த 10 ஆண்டுகளை திரும்பி பார்த்தால், முந்தைய அரசு விட்டுச்சென்ற சவால்களை வெற்றிகரமாக முறியடித்ேதாம் என்பதை திருப்தியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இருப்பினும், 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக்க வேண்டி இருப்பதால், பல மைல்கற்களையும், மலைகளையும் கடக்க வேண்டி இருக்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.