ஏறுமுகம் காணும் மளிகை பொருட்கள் விலை; பரிதவிக்கும் பாமர மக்கள்!
மளிகை மற்றும் இதர சமையல் பொருட்கள் விலை கடந்த சில மாதங்களாகவே உயர்ந்து கொண்டே வருகிறது. அதன்படி அரிசி மற்றும் காய்கறியின் விலை 2022-23ம் ஆண்டை ஒப்பிடுகையில் கிலோவிற்கு 20 முதல் 30 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. விலைவாசியை கணக்கிட வியாபாரிகளின் கால அட்டவணை அந்த ஆண் டின் ஜூன் மாதம் முதல் அடுத்த ஆண்டின் ஜூன் மாதம் வரையாக உள்ளது. அந்த வகையில் முதல் தர அரிசி கடந்த 2023 ஜூன் மாதம் கிலோ ரூ.45 முதல் 50 வரை விற்பனையானது. இப் போது ரூ.15 முதல் 25 வரை அதிகரித்து 1 கிலோ அரிசி ரூ.60 முதல் 70-க்கு விற்பனையாகிறது. இதேபோல் மசாலா பொருட் களின் விலையும் அதிகரித்துள்ளது. எடுத்துக்காட்டாக கடந்த 2023-ம் ஆண்டு ரூ.240-க்கு விற்பனையான ஜீரகம் இப்போது ரூ.540-க்கு விற் பனையாகிறது. ரூ.310 முதல் 320 வரை விற்ற சோம்பு இப்போது ரூ.480-க்கு விற்பனை யாகிறது. கிலோ ரூ. 560-க்கு விற்பனையான மிளகு இப்போது ரூ.840-க்கு விற்பனையாகிறது. எண்ணை மட்டும் கடந்த ஆறு மாதமாக விலை ஏறாமல் உள் ளது. இது மக்கள் மத்தியில் சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. எண்ணை விலை ரஷ்யா – உக்ரைன் போர் காலத்தில் அதிகரித் திருந்தது. போர் சூழல் குறைய சர்வதேச சந்தைகளில் இப்போது எண்ணை விலையும் சற்று குறைந்துள்ளது. மேலும் பண்டிகை காலங்கள் நெருங்கும் சமயத்தில் எண்ணை பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளது என் கின்றனர் வியாபாரிகள். தானிய வகைகளின் விலையும் ஏற்ற, இறக் கத்தோடு காணப்பட் டாலும், இப்போது நம்பிக்கை அளிக்கும் விதமாகவே உள்ளது. எடுத்துக்காட்டாக கடந்த ஆண்டு கிலோ ரூ.210-க்கு விற்பனையான துவரம் பருப்பு இப்போது ரூ.140-க்கு விற்பனையாகிறது. கிலோ ரூ.160க்கு விற்பனையான உளுந்தம் பருப்பு இப்போது 140-க்கு விற்பனை யாகிறது. கடந்த ஆண்டு கிலோ ரூ.90-க்கு விற்பனையான கொண்டை கடலை வகைகள் இப்போது 150 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சமையலில் மணம், ருசி மற் றும் ஆரோக்கியம் சேர்க்கும் மருத்துவ குணம் நிறைந்த அத் தியாவசிய பொருளாக பூண்டு உள்ளது. தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் பூண்டு விளைச்சல் பாதிக்கப்பட்டதால் இப்போது கிலோ ரூ.450 முதல் 500 வரை விற்பனையாகிறது. புளியை பொறுத்தவரை கடந்த ஆண்டு ரூ.180-க்கு விற்பனையான புளி,இப்போது ரூ.195 முதல் 210-க்கு விற்பனையாகிறது. இந்நிலை இன்னும் சில வாரங்களுக்கு நீடிக்கும் என்கின்றனர் வியாபாரிகள். மளிகை பொருட்கள் விலை வாசி உயர்வு குறித்து வியாபாரிகள் வட்டாரங்கள் கூறியதாவது:- விலைவாசி உயர்வு என்பது ஆண்டுதோறும் தவிர்க்க முடியா தது. ஆனால் இந்த ஆண்டு நாடெங்கிலும் ஏற்பட்ட இயற்கை சீற்றங்களால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித் துள்ளது. பெட்ரோல், டீசல் விலை குறைந்தால் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைய வாய்ப்புள்ளது. ஆனால் இப்போது வரை பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. சம நிலையிலேயே நீடிக்கிறது. எனவே அத்தியாவசிய பொருட்களின் விலையும் ஏறுமுகமாகவே உள்ளது. விலைவாசியை குறைத்து மக்களின் சுமையை குறைக்க அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.