தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறதா?
தமிழ்நாட்டில் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணம் கடந்த செப்டம்பர் மாதம் உயர்த்தப்பட்டது.
புதிய மின் கட்டணத்தின்படி, வீடுகளுக்கான மின்சாரக் கட்டணம் 12 சதவீதம் முதல் 52 சதவீதம் வரை உயர்த்தப்பட்டதால், மின் கட்டணத்தை செலுத்த முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றன
இந்நிலையில், மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வழங்கியுள்ள அனுமதியின் பேரில், அடுத்த மாதம் முதல் மின் கட்டணத்தை 4 புள்ளி 7 சதவிகிதம் வரை உயர்த்த மின் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.
மின் கட்டண உயர்வு நுகர்வோரை கடுமையாக பாதிக்கும் என்பதால், இந்த முடிவை கைவிட வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். இதுதொடர்பாக சென்னையில் மின் வாரிய அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
அதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் தற்போதைக்கு இருக்காது என மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமைச்சர் செந்தில் பாலாஜி விரைவில் வெளியிடுவார் என்றும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.