“வீவர்ஸ்சை” அதிகரிக்க நடிகையை போலியாக சித்தரித்தவர் கைது!
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி சித்தரிப்பு வீடியோ அண்மையில் சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து டில்லி மகளிர் ஆணையம் அளித்த புகாரின்பேரில், டில்லி சிறப்புப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த ஈமனி நவீன் (வயது 23) என்ற பி.டெக் பட்டதாரி, நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி சித்தரிப்பு வீடியோவை வெளியிட்டது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரித்தபோது, சமூக வலைதளத்தில் தன்னைப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ராஷ்மிகா மந்தனாவை தவறாக சித்தரித்து வீடியோ பதிவிட்டதாக தெரிவித்தார். இதனால் பிரச்சினை ஏற்பட்டதால், சம்பந்தப்பட்ட வீடியோவை சமூக வலைதளத்தில் இருந்து உடனடியாக நீக்கிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.