வடலூர் வள்ளலார் பெருவெளிக்கு வெளியே பன்னாட்டு மையத்தை அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த செயற்குழுவில் முடிவு!
தெய்வத் தமிழ்ப் பேரவையின் செயற்குழுக் கூட்டம் திருச்சி இரவி சிற்றரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, பேரவையின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வடலூர் சத்தியஞான பெருவெளியை ஆக்கிரமிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு வள்ளலார் பன்னாட்டு மையத்தை நிறுவக்கூடாது. வேறு இடத்தில் நிறுவ வேண்டும் எனக் கோரி கடலூரில் பிப்ரவரி 20 அன்று பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவது. வள்ளலார் 200ஆம் ஆண்டையொட்டி, தமிழ்நாடு அரசு வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைக்க முன்வந்த செயலை தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருமனமாக வரவேற்கிறது. ஆனால், அந்த மையத்தை, வடலூர் சத்திய ஞானசபை பெருவெளியை ஆக்கிரமித்து நிறுவ நடக்கும் முயற்சிகளை தெய்வத் தமிழ்ப் பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது. இச்செயல், வள்ளலாரின் இறையியல் கொள்கையையும் மறுப்பதாகும். அப்படி நிறுவப்பட்டால் திருவருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சுத்த சன்மார்க்கத்தின் நோக்கமும் சத்திய ஞானசபை இயற்கை உண்மை தத்துவமும் சிதைக்கப்படும். மேலும் இலட்சக்கணக்கான மக்கள் தைப்பூசப் பெருவிழாவிற்கு வந்து செல்வதற்கு அது தடையாகவும் இருக்கும். எனவேதான், இச்சிக்கலின் தீவிரத்தை உணர்ந்து, தெய்வத் தமிழ்ப் பேரவை மற்றும் வள்ளலார் பணியகத்தின் பொறுப்பாளர்கள் கடந்த 08.12.2023 அன்று, கடலூர் – இந்து சமய அறநிலைய துறை இணை ஆணையரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அதனைத் தொடர்ந்து, 10.01.2024 அன்று, கடும் காவல்துறை கெடுபிடிகளுக்கிடையே – கடலூர் மஞ்சக்குப்பத்தில் உத்திரஞான சிதம்பரம் சேவை இயக்கம் ஒருங்கிணைத்த உண்ணாநிலை போராட்டத்தில் நூற்றுக்கணக்கான அன்பர்களுடன் பங்கேற்றோம். பல்வேறு அரசியல் கட்சியினரும் இக்கோரிக்கையை வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர். எனவே, தமிழ்நாடு அரசு, வள்ளலார் அமைத்துக் கொடுத்த சத்திய ஞானசபை பெருவெளியில் பன்னாட்டு மையத்தை அமைக்கத் திட்டமிடக் கூடாது என்றும், வடலூர் பகுதியிலேயே வேறு இடத்தில் அதனை அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி, வரும் 20.02.2024 அன்று, கடலூரில் தெய்வத் தமிழ்ப் பேரவையின் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்திட இச்செயற்குழுக் கூட்டம் ஒருமனதாக தீர்மானிக்கிறது. இதில் சன்மார்க்க அன்பர்கள் திரளாக கலந்து கொண்டனர்.