இயற்கை பேரிடர்களால் தொடர்ந்து பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு செயற்கை பேரிடரை பரிசாக தந்திருக்கும் தி.மு.க அரசின் வேளாண் பட்ஜெட்!

2021 சட்டமன்ற தேர்தலின் போது வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் எனும் தலைப்பில் திமுக அளித்த 55 வாக்குறுதிகளில் சிலவற்றைக் கூட நிறைவேற்ற முடியாத, நிறைவேற்ற முன்வராத திமுக அரசு தாக்கல் செய்திருக்கும் வேளாண் பட்ஜெட் தமிழக விவசாயிகளுக்கு எந்தவகையிலும் பயனளிக்காத வெற்று பட்ஜெட்.தேர்தல் வாக்குறுதி 32-ல் வேளாண் விலை பொருட்களுக்கு தகுந்த விலை நிர்ணயம்33-ல் சிறு,குறு விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி35-ல் அனைத்து உணவுப் பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை42-ல் 100 நாள் வேலைத் திட்டம் 150 நாட்களாக அதிகரிக்கப்படும்43-ல் விலை நிலங்கள் வேறு பயன்பாட்டிற்கு மாற்றுவது தடுத்து நிறுத்தப்படும்44-ல் மின் இணைப்பு கோரும் விவசாயிகள் அனைவருக்கும் தடையின்றி இலவச மும்முனை மின் இணைப்பு47-ல்வேளாண் மகளிருக்கு 30 சதவிகிதம் மானியம்54-ல் மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்75-ல் நெல்லுக்கு 2500 ரூபாயும், கரும்புக்கு 4000 ரூபாயும் குறைந்தபட்ச ஆதார விலையாக நிர்ணயம்

இப்படியான எண்ணற்ற நிறைவேற்ற முடியாத பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சிக்கு வந்த திமுக, அந்த தேர்தல் வாக்குறுதிகளை மறந்ததோடு, வேளாண் குடிமக்கள் மீது சிறிதளவும் அக்கறையில்லாத வெற்று அறிக்கையை வேளாண் பட்ஜெட் எனும் பெயரில் 4வது ஆண்டாக இன்று தாக்கல் செய்திருக்கிறது.

கடந்த ஆண்டு காவிரியில் இருந்து உரிய நீரை பெற்றுத் தர முடியாத திமுக அரசால் டெல்டா பகுதிகளில் பயிரப்பட்டிருந்த நெற்பயிர்கள் கருகியதோடு விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது. அண்மையில் தென்மாவட்டங்களில் பெய்த கனமழையாலும், அதனால் ஏற்பட்ட வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் மீண்டு வருவதற்கான பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட எந்த திட்டங்களும் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை.

‘கடைமடைக்கும் பாசன நீர்’ என்பது ஒட்டுமொத்த விவசாயிகளின் நிறைவேறா ஆசையாகவே உள்ளது. கடந்த ஆண்டுகளில் தூர்வாரும் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதிகளின் மூலமாக எந்த பணிகளும் முறையாக நடைபெறாத நிலையில் நடப்பாண்டிலும் ஒதுக்கப்பட்டுள்ள ரூ.10 கோடி ரூபாயில் தூர்வாரும் பணிகள் நடைபெறும் என்ற நம்பிக்கை டெல்டா விவசாயிகளிடம் துளியளவும் இல்லை.

கடந்த ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த மதுரை மல்லிக்கு ஓர் இயக்கம், பலா இயக்கம், முருங்கை இயக்கம், மிளகாய் மண்டலம், கறிவேப்பிலை தொகுப்பு என எந்தவிதமான திட்டங்களும் செயல்பாட்டிற்கு வராத நிலையில் நடப்பாண்டில் புதுப்புது பெயர்களில் திட்டங்களை அறிவிப்பது விவசாயிகளை ஏமாற்றும் வேலையே தவிர அதனால் எந்த பலனும் கிடைக்கப்போவதாக தெரியவில்லை. பருவம் தவறிய கனமழையாலும், இயற்கை பேரிடராலும் பாதிக்கப்படும் விவசாயிகளை பாதுகாக்க சிறப்பு திட்டம், மாநில அரசே முழுமையான பயிர்க்காப்பீடு வழங்கும் திட்டம், இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பதற்கான பெருந்திட்டங்கள், சிறு தானியங்களை அரசே கொள்முதல் செய்யும் திட்டம், காவிரி டெல்டா மாவட்டங்களில் வேளாண் சார்ந்த தொழிற்சாலைகள் என விவசாயிகள் எதிர்பார்த்த எந்த புதிய திட்டங்களும் இல்லாத வேடிக்கை பட்ஜெட்டையே திமுக அரசு தாக்கல் செய்திருக்கிறது.மொத்தமாக பார்க்கும் போது கடந்த மூன்று ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகளின் கலவையாக தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நடப்பு ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை, ஏற்கனவே இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக விவசாயிகளுக்கு செயற்கை பேரிடரை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதே தவிர காலமெல்லாம் போராடும் விவசாயிகளின் கண்ணீரை துடைக்கும் வகையிலோ, அவர்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலோ எந்தவிதமான அறிவிப்புகளும் இல்லாத வெற்று அறிக்கையாகவே அமைந்துள்ளது. விவசாயிகளின் கண்ணீருக்கு வீரியம் அதிகம் என்பதை உணராத திமுக அரசின் ஆயுட்காலம் முடியும் நேரம் நெருங்கிவிட்டது என்பதை வரும் தேர்தலில் விவசாயிகள் உணர்த்துவார்கள் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து உள்ளார்.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial