கர்ப்பம் கலைந்ததால் விபரீத முடிவு!
கோவை மாவட்டம் ஆனைமலையை அடுத்த சரளபதியை சேர்ந்தவர் கவுசல்யா(வயது 21). இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையை சேர்ந்த காளிமுத்து என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 வயதில் மகன் உள்ளார். தற்போது கவுசல்யா 3 மாத கர்ப்பிணியாக இருந்தார். அவர், கூலி வேலைக்கு செல்வது வழக்கம். கடந்த 1 வாரத்துக்கு முன்பு வேலைக்கு சென்றபோது, எதிர்பாராதவிதமாக அவரது கர்ப்பம் கலைந்து. இதனால் கவுசல்யா மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று காளிமுத்து தனது மகனை அழைத்துக்கொண்டு அருகில் உள்ள கடைக்கு சென்றார். அப்போது வீட்டில் தனியாக இருந்த கவுசல்யா விஷம் குடித்து மயங்கினார். சிறிது நேரம் கழித்து மகனுடன் வீட்டுக்கு வந்த காளிமுத்து தனது மனைவி கவுசல்யா மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், கவுசல்யா விஷம் குடித்து இருப்பதாகவும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகவும் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.