மகள்களை கட்டிப்பிடித்துக்கொண்டு ரயில்முன் பாய்ந்த தாய்!
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உத்தாணியில் ரயில்வே கேட் உள்ளது. இந்த ரயில்வே கேட் அருகில் குடமுருட்டி ஆற்றுப்பாலத்தில் செங்கோட்டையில் இருந்து மயிலாடுதுறை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனது 2 மகள்களை கட்டி அணைத்தப்படி ரயிலின் முன் பாய்ந்தார். இதில் தூக்கி வீசப்பட்ட 3 பேரும் உடல்கள் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் நடத்திய விசாரணையில், மகள்களுடன் தற்கொலை செய்து கொண்ட பெண், தஞ்சை கும்பகோணம் நால்ரோடு பொன்னுசாமி நகரை சேர்ந்த ராஜேஷ் மனைவி ஆர்த்தி (வயது 40) என்பதும், இவர்களுடைய மகள்கள் ஆருத்ரா(வயது 11), சுபத்ரா (வயது 8) என்பதும் தெரிய வந்தது. மேலும் ராஜேஷ் கோவையில் கட்டுமானம் தொடர்பான நிறுவனம் நடத்தி வருகிறார். ஆர்த்தி கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வந்தார். கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆருத்ரா 6-ம் வகுப்பும், சுபத்ரா 4-ம் வகுப்பும் படித்து வந்துள்ளனர். தோழியின் வளைக்காப்பு விழாவுக்காக செல்வதாக வீட்டில் கூறி விட்டு ஆர்த்தி தனது மகள்கள் ஆருத்ரா, சுபத்ராவுடன் பாபநாசம் அருகே உள்ள உத்தாணி கிராமத்திற்கு ஸ்கூட்டரில் சென்றுள்ளார். இந்த நிலையில் உத்தாணி ரயில்வே கேட்டுக்கு சென்ற ஆர்த்தி தான் வந்த ஸ்கூட்டரை அங்கேயே நிறுத்தி விட்டு மகள்களுடன் தண்டவாளத்துக்கு சென்றுள்ளார். அங்கு 3 பேரும் கட்டி அணைத்தபடி செங்கோட்டையில் இருந்து மயிலாடுதுறை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு பாய்ந்தனர். இதில் ஆர்த்தி மற்றும் அவரது மகள்கள் ஆருத்ரா, சுபத்ரா ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரிந்தது. இதுகுறித்து கும்பகோணம் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.