பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்கும் மாநில அளவிலான மாபெரும் உண்ணாவிரதத்தை பேரெழுச்சியுடன் நடத்த தீர்மானம்!
தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவின் (டிட்டோ ஜாகி) மாநில உயர்மட்டக்குழுக் கூட்டம் 15.02.2024 வியாழன் இரவு 7 மணி முதல் 9 மணி வரை காணொளி வழியாக நடைபெற்றது. கூட்டத்திற்கு டிட்டோ ஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொதுச்செயலாளருமாகிய மன்றம் நா.சண்முகநாதன் தலைமை வகித்தார். கூட்டத்தில் டிட்டோ ஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானங்கள் பின்வருமாறு.
தீர்மானம் எண்:1
தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் 90 சதவீத ஆசிரியர்களின், குறிப்பாகப் பெண்ணாசிரியர்களின் தொடக்கக்கல்வித்துறையில் பதவி உயர்வு வாய்ப்பைப் பறிக்கும் வகையிலும், 60 ஆண்டுகாலமாக நடைமுறையில் இருந்த ஒன்றிய முன்னுரிமையை மாற்றி மாநில முன்னுரிமையைக் கொண்டு வந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் பணி முன்னுரிமை மற்றும் பதவி உயர்வு ஆகியவற்றைப் பாதிக்கும் வகையிலும் வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண்: 243 பள்ளிக்கல்வி (EE1(1)) துறை, நாள்: 21.12.2028ஜ உடனடியாக ரத்து செய்தல்…
12.10.2023 அன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில், பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகியோர் முன்னிலையில் டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 12 கோரிக்கைகள் உட்பட அன்று முன்வைக்கப்பட்ட பங்களிப்பு ஓய்வூதியம் ரத்து, இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு களைந்து மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்குதல் ஆகிய 30 அம்சக் கோரிக்கைகள் உள்ளிட்ட 31 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, ஏற்கனவே 03.02.2024 அன்று நடைபெற்ற டிட்டோஜாக் மாநிலப் பொதுக்குழு எடுத்த முடிவின்படி 19.02.2024 திங்கள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி முடிய சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மாநில தலைமை அலுவலகம் பின்புறம் உள்ள காயிதே மில்லத் மணிமண்டபம் அருகில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்கும் மாநில அளவிலான மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டத்தை பேரெழுச்சியுடன் நடத்துவதென மாநில உயர்மட்டக்குழுஏகமனதாகத் தீர்மானிக்கிறது.
தீர்மானம் எண்: 2
19.02.2024 அன்று நடைபெறும் டிட்டோஜாக்கின் மாநில அளவிலான மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டத்தை டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் 12 பேரும் கூட்டுத் தலைமையேற்று நடத்துவதெனவும், டிட்டோஜாக் இணைப்புச் சங்கங்களின் மாநில தலைவர்கள் கூட்டாக முன்னிலை வகிப்பதெனவும், டிட்டோஜாக் இணைப்புச் சங்கங்களின் மாநில பொருளாளர்கள் கோரிக்கை விளக்கவுரை ஆற்றுவதெனவும் மாநில உயர்மட்டக்குழுஏகமனதாகத் தீர்மானிக்கிறது.
தீர்மானம் எண்: 3
19.02.2024 அன்று நடைபெறும் டிட்டோஜாக்கின் மாநில அளவிலான மாபெரும்உண்ணாவிரத அறப்போராட்டத்தில் டிட்டோஜாக் இணைப்புச் சங்கங்களின்பெருவாரியான ஆசிரியர்களைப் பங்கேற்கச் செய்திட அந்தந்தச் சங்கங்கள் உரிய செய்திட வேண்டுமெனவும், உண்ணாவிரத அறப்போராட்டத்தில் பங்கேற்கும் தனிச்சங்க அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில் கொடிகள், பதாகைகள்,உள்ளிட்ட எவற்றையும் பயன்படுத்தக் கூடாதெனவும் மாநில உயர்மட்டக்குழு ஏகமானதாகத்தீர்மானிக்கிறது.
தீர்மானம் எண்: 4
19.02.2024 அன்று சென்னையில் டிட்டோஜாக் சார்பில் நடைபெறும் மாநில அளவிலான மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டத்தில் பங்கேற்கும் ஆசிரியர்கள் தகுதியுள்ள விடுப்பை எடுத்துக்கொண்டு போராட்டக் களத்திற்கு வர வேண்டுமெனவும், இறுதிவரை கட்டுப்பாட்டைக் கடைபிடித்து போராட்டக்களத்தில் நிற்க வேண்டுமெனவும் மாநில உயர்மட்டக்குழு ஏகமானதாகக் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் எண்: 5
19.02.2024 அன்று சென்னையில் டிட்டோஜாக் சார்பில் நடைபெறும் உண்ணாவிரத அறப்போராட்டத்திற்கான செலவினங்களை டிட்டோஜாக் இணைப்புச் சங்கங்கள் வழக்கமான நடைமுறையில் பகிர்ந்து கொள்வதெனவும், அதற்கான முன் தொகையாக ஒவ்வொரு சங்கமும் தலா ரூபாய் பத்தாயிரம் வீதம் உடனடியாக அளித்திட வேண்டுமெனவும் மாநில உயர்மட்டக்குழு ஏகமனதாகத் தீர்மானிக்கிறது.