சென்னையின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை
சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, தமிழகத்தில் ஒருபுறம் கத்தரி வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், மறுபுறம் மிதமான மழை பெய்து வெப்பத்தை தணித்து வருகிறது. இதற்கிடையே, காற்றின் திசை மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. கிண்டி, கோடம்பாக்கம், வடபழனி, சாலிகிராமம், ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், அரும்பாக்கம், சூளைமேடு, கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதிகளில் வெப்பம் தணிந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.