மின் வாரியத்திற்கு ரூ.13,811 கோடி இழப்பு
சென்னை: தமிழக மின் வாரியம், ஒரு நிதியாண்டிற்கான வரவு – செலவு தொடர்பான உத்தேச விபரங்களை, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப்பிக்கிறது. அதை பரிசீலித்து, ஆணையம் ஒப்புதல் தரும்.ஆணையம் ஒப்புதல் அளித்ததை விட அதிக செலவு ஏற்பட்டால், அதற்கான அறிக்கையை ஆணையத்திடம் சமர்ப்பித்து, ஒப்புதல் பெற வேண்டும்.அதன்படி, 2022 – 23ம் நிதியாண்டிற்கான மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் வரவு – செலவு விபரம், ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. அதை, மக்களின் பார்வைக்கு வெளியிட்ட பின் சமர்ப்பிக்குமாறு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. கடந்த நிதியாண்டில் மின் கட்டணம் வாயிலாக 60,505 கோடி ரூபாய்; மானியம் நிலுவை 1,776 கோடி ரூபாய்; இதர வருவாய் 5,398 கோடி ரூபாய்; தமிழக அரசின் மானியம் 12,688 கோடி ரூபாய் என, மொத்தம் 80,367 கோடி ரூபாய் வருவாய் கிடைத்து உள்ளது. செலவுகளை பொறுத்தவரை, அதிக அளவாக மின் கொள்முதல் மற்றும் வழித்தடத்திற்கு, 51,460 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது.மின் உற்பத்திக்கு 22,407 கோடி ரூபாய்; கடன்களுக்கான வட்டிக்கு 6,359 கோடி ரூபாய்; இயக்கம் மற்றும் பராமரிப்புக்கு 10,701 கோடி ரூபாய் என, மொத்தம் 94,178 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. வரவை விட செலவு அதிகம் இருப்பதால், 13,811 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.